டிட்கோ நிறுவன ஆராய்ச்சி பூங்கா மதுரை பல்கலையில் இடம் தேர்வு
டிட்கோ நிறுவன ஆராய்ச்சி பூங்கா மதுரை பல்கலையில் இடம் தேர்வு
UPDATED : நவ 13, 2024 12:00 AM
ADDED : நவ 13, 2024 08:35 AM
சென்னை:
இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்புக்கு உதவும், டிட்கோ நிறுவனத்தின் பல்கலை ஆராய்ச்சி பூங்கா, மதுரையில் உள்ள காமராஜர் பல்கலை வளாகத்தில் அமைக்கப்பட உள்ளது.
சென்னை தரமணியில், ஐ.ஐ.டி., ஆராய்ச்சி பூங்கா உள்ளது. அங்கு, பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.
இதேபோல, டிட்கோ எனப்படும், தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், அரசு ஆகியவற்றை ஒன்றிணைத்து, புத்தாக்கம், ஆராய்ச்சி, அறிவுசார் சொத்துரிமை உருவாக்கம், தொழில்முனைவோர் மேம்பாட்டை உள்ளடக்கிய, பல்கலை ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படவுள்ளது.
இது, அறிவு, தொழில்நுட்ப பரிமாற்றம், தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்க உதவும். பல்கலை, தொழில்நுட்ப மையங்கள், தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து செயல்படும்.
இதன் வாயிலாக, தொழில் நிறுவனங்களுக்கு எந்தெந்த திறனில், பணியாளர்கள் தேவை என்பதை கேட்டறிந்து, அதற்கு ஏற்ப மாணவர்களின் திறன்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய கண்டுபிடிப்பை ஊக்குவித்து, காப்புரிமை பெற்று, வணிகமயாக்கலும் ஊக்குவிக்கப்படும். அதன்படி, மதுரையில் அமைக்கப்பட உள்ள இரண்டாவது பல்கலை ஆராய்ச்சி பூங்காவுக்கு, அம்மாவட்டத்தில் உள்ள காமராஜர் பல்கலை வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அங்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலகுகள், பாதுகாப்பு அமைப்பு, ஆய்வகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை, டிட்கோ விரைவில் துவக்க உள்ளது.
கோவையில் உள்ள, டைசல் பார்க் வளாகத்தில், முதல் பல்கலை ஆராய்ச்சி பூங்கா அமைக்கும் பணி நடக்கிறது. இது, விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளது.