எம்.ஐ.டி., - டபிள்யூ.பி.யு., பல்கலையில் வேலைவாய்ப்பு முகாம்!
எம்.ஐ.டி., - டபிள்யூ.பி.யு., பல்கலையில் வேலைவாய்ப்பு முகாம்!
UPDATED : ஆக 30, 2026 10:29 AM
ADDED : ஆக 30, 2026 10:30 AM
புனே:
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள எம்.ஐ.டி., வேர்ல்ட் பீஸ் பல்கலைக்கழகத்தில், 2026ம் கல்வி ஆண்டிற்கான வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் உலகளவில் உள்ள 750 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவர்களை தேர்வு செய்தன.
மேலும், ஐ.டி., மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல், உற்பத்தி, நிதிச் சேவைகள், கன்சல்டிங் மற்றும் எப்.எம்.சி.ஜி., உள்ளிட்ட பல்வேறு முன்னணி துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மூலம், மொத்தம் 2,500க்கும் அதிகமான பணி நியமன ஆபர்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் அமேசான், என்விடியா, ஜேபி மோர்கன், மோர்கன் ஸ்டான்லி, ஐ.பி.எம்., ஆரக்கிள், கம்மின்ஸ், ஜான்சன் அன்ட் ஜான்சன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், காக்னிசண்ட், ஆக்சென்ச்சர், டி.சி.எஸ்., விப்ரோ, இன்போசிஸ், டெலாய்ட், டாடா மோட்டார்ஸ், சோனி இந்தியா மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட உலகின் தலை சிறந்த பன்னாட்டு நிறுவனங்கள் நேரில் பங்கேற்று திறமையான மாணவர்களை தேர்வு செய்தன.
இதில் அதிகபட்சமாக ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.46 லட்சம் சம்பள பேக்கேஜ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான சம்பளத்தில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இது குறித்து பல்கலையின் தலைமை கல்வி அதிகாரி டாக்டர் பிரசாத் டி கண்டேகர் கூறுகையில், 'உலகளாவிய பொருளாதார சூழலில் நிலவும் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், நமது பல்கலைக்கழக மாணவர்கள் மிகச் சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் செய்த மாணவர்களின் திறமையைப் பாராட்டி, பெரும்பாலான நிறுவனங்கள் அவர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு ஆஃபர்களை வழங்கியுள்ளன. வளாகத்திற்கு வரும் நிறுவனங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இங்கு வந்து மாணவர்களைத் தேர்வு செய்வது பல்கலையின் மீதான கார்ப்பரேட் நிறுவனங்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது,' என்றார்.
மேலும், மாணவர்களுக்கு தொழில் துறைக்கு ஏற்ற பிரத்யேக பூட்கேம்ப் பயிற்சிகள், திறன் மேம்பாட்டு வகுப்புகள் மற்றும் மாதிரி நேர்காணல்கள் ஆகியவை முறையாக வழங்கப்பட்டதே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
