மலேசியாவில் பிளாஸ்டிக் தார் சாலை மதுரை பேராசிரியருடன் ஒப்பந்தம்
மலேசியாவில் பிளாஸ்டிக் தார் சாலை மதுரை பேராசிரியருடன் ஒப்பந்தம்
UPDATED : நவ 14, 2024 12:00 AM
ADDED : நவ 14, 2024 11:10 AM

திருப்பரங்குன்றம் :
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி வேதியியல் துறை பேராசிரியர் வாசுதேவன் கண்டுபிடித்த பிளாஸ்டிக் தார் சாலை தொழில்நுட்பத்தை மலேசியாவில் பயன்படுத்த கல்லுாரி - மலேசியா நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
வாசுதேவன் 2002ல் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி தார்ச்சாலை அமைக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார். 2006ல் இந்திய காப்புரிமை பெறப்பட்டது. இத்தொழில் நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியா முழுவதும் 2.5 லட்சம் கி.மீ., பிளாஸ்டிக் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா, பூடான் நாடுகளிலும் அமைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிளாஸ்டிக் தார்ச்சாலை அமைக்க டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரியும், மலேசிய நிறுவனமான ரெனெர்ஜி புமி ஹூஅ, எஸ்.டி.என்., பி.எச்டி நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. மலேசியா முதலீடு வர்த்தகம் தொழில் துறை அமைச்சர் அப்துல் அஜீஸ் முன்னிலையில் உதவி பேராசிரியர் ராமலிங்க சந்திரசேகர், மலேசியா நிறுவனத்தின் இயக்குனர் முஸ்யஹானதுல் ஜன் பிந்தி மர்சுகி கையெழுத்திட்டனர்.