UPDATED : மார் 06, 2025 12:00 AM
ADDED : மார் 06, 2025 08:58 AM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்று துவங்கியுள்ள நிலையில், தமிழ் பாடத் தேர்வை, 7,890 பேர் தேர்வு எழுதினர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, 38 மையங்களில் நடத்தப்படுகிறது. நேற்று, பிளஸ் 1 மாணவர்களுக்கான, தமிழ் பாடத் தேர்வு நடந்தது.
அதில், 3,495 மாணவர்கள், 4,347 மாணவியர் என, 7,842 பேர் தேர்வு எழுதினர். 74 மாணவர்கள், 52 மாணவியர் என, 126 பேர் 'ஆப்சென்ட்' ஆகி இருந்தனர். அதேபோல, 'அரியர்' தேர்வை, 10 மாணவர்கள், 18 மாணவியர் என, 28 பேர் எழுதினர். அதில், 4 மாணவர்கள், 7 மாணவியர் என, 11 பேர் ஆப்சென்ட் ஆகி இருந்தனர். தனித்தேர்வர்களை பொறுத்தமட்டில், 19 மாணவர்கள், ஒரு மாணவி என, 20 பேர் தேர்வு எழுதினர். 11 பேர், தேர்வு எழுதவில்லை.
தமிழ் பாடத்தேர்வு குறித்து, பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் கருத்து வருமாறு:
சஹானா:
தமிழ் பாடத் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்கள், பாடத்தின் உள் பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. இலக்கணப் பகுதிகள் பெரும்பாலும் சிந்தித்து எழுதும் வகையில் இருந்தது. மற்ற வினாக்கள் அனைத்தும் மிகவும் எளிமையாக இருந்தது. பயிற்சி பெற்றிருந்ததால், குழப்பமின்றி விடைகளை எழுதினேன்.
ரோஷன்அக்தர்:
ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு நன்றாக விடை எழுதினேன். பாட உட்பகுதியில் இருந்து ஒரு மதிப்பெண் வினாக்கள் இடம்பெற்றிருந்தாலும், தீவிர பயிற்சி எடுத்திருந்ததால், அனைத்துக்கும் எளிதாக விடை எழுத முடிந்தது.
சிறு வினா பகுதிகள் அனைத்தும் எளிமையாக இருந்தது. அதிக மதிப்பெண்கள் கிடைக்கும்.
தனிஷ்கா:
மொழிப்பாடமாக பிரெஞ்ச் பிடிக்கிறேன். இன்று நடந்த தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தது. இவ்வினாக்கள் பாட உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்ததால் பதில் அளிக்க சற்று கடினமாக இருந்தது. சிந்தித்து எழுதி உள்ளேன். கட்டுரை பகுதி, சிறு வினா பகுதி, உறவுமுறை கடிதம், உரையாடல் பகுதி போன்ற வினாக்கள் எளிமையாக இருந்தது.
பூபேந்திர சிங்:
மொழிப்பாடமாக ஹிந்தி பிடிக்கிறேன். அதன்படி இன்று நடந்த தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்கள், பாட புத்தகத்தின் உள் பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. நான்கு மதிப்பெண் வினாக்கள், சிந்தித்து எழுதும்படி இருந்தது. இலக்கணப் பகுதி, 6 மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது.
பள்ளி அளவில் தேர்வு எழுதி பயிற்சி பெற்றிருந்ததால், பொதுத்தேர்வை எளிதாக எதிர்கொள்ள முடிந்தது.
வால்பாறை
வால்பாறையில் நான்கு தேர்வு மையங்களில், பிளஸ் 1 தேர்வு நடந்து. 7 பள்ளிகளை சேர்ந்த, 348 மாணவர்கள் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.
11 மாணவர்கள் ஆப்சென்ட் ஆன நிலையில், 337 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
தமிழ்த்தேர்வு குறித்து வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கருத்து வருமாறு:
ரம்யா: தமிழ் பாடத்தேர்வை பொறுத்த வரை வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது. சில வினாக்கள் மட்டும் கடினமாக இருந்தன. இருப்பினும் பிற வினாக்களுக்கு நல்ல முறையில் விடை எழுதியுள்ளேன். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என நம்புகிறேன்.
ஸ்வாதி:
தேர்வில் எதிர்பார்த்த படி வினாக்கள் கேட்கப்பட்டதால் விறுவிறுவென விடைகளை எழுதினேன். நான்கு வினாக்கள் மட்டும் சற்று கடினமாக இருந்தது.
மற்றபடி படித்த பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதால், தேர்வை சிறப்பான முறையில் எழுதியுள் ளேன். நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
இனியன்:
தமிழ்த்தேர்வை பொறுத்தவரை ஆசிரியர்கள் பயிற்சி அளித்த பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதால், தேர்வை தெளிவாகவும், நிதானமாகவும் எழுதினேன்.
ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தது. திட்டமிட்டு படித்தால் தேர்வை நல்ல முறையில் எதிர்கொள்ள முடிந்தது.