UPDATED : ஏப் 18, 2024 12:00 AM
ADDED : ஏப் 18, 2024 09:34 AM
சென்னை:
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு பணி நிறைவு பெற்றது. பிளஸ் 1 விடைத்தாள் மதிப்பீடு துவங்கியுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மாதம் நடந்தன. இதில், பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்கள், மார்ச் 1ல் இருந்து மதிப்பீடு செய்யும் பணி துவங்கியது.
மாநிலம் முழுதும், 83 மையங்களில் விடை திருத்த பணிகள் நடந்தன. ஒவ்வொரு பாடத்திலும், 7.75 லட்சம் விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்டு உள்ளன. இந்த பணிகள் நேற்று முன்தினம் மாலையுடன் முடிந்தன.
இதையடுத்து, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தம் நேற்று துவங்கியது. மாநிலம் முழுதும், 83 மையங்களில், ஒவ்வொரு பாடத்திலும், 8 லட்சம் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
30,000த்துக்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். வரும், 25ம் தேதிக்குள் விடை திருத்த பணிகளை முடித்து, மாணவர்களின் மதிப்பெண் விபரங்களை, ஆன்லைன் வழியில் அரசு தேர்வுத்துறைக்கு பதிவேற்றுமாறு, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.