தமிழக வீரர் குகேஷூக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
தமிழக வீரர் குகேஷூக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
UPDATED : ஏப் 22, 2024 12:00 AM
ADDED : ஏப் 22, 2024 05:25 PM

சென்னை:
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக இளம் வீரர் குகேஷூக்கு (வயது 17) பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த வெற்றியின் மூலம் உலக செஸ் சாம்பியன் தொடரில் சீனாவின் டிங் லிரெனுடன் குகேஷ் மோத உள்ளார்.
சாம்பியன் பட்டம்
கனடாவின் டொரன்டோவில் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடர் நடைபெற்றது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, குகேஷ், அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா உள்ளிட்ட 8 பேர் பங்கேற்றனர். இந்த போட்டியில் தமிழக வீரர் குகேஷ் (வயது 17) சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். செஸ் ஜாம்பவானான விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு, கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற, 2வது வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்துள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தி: குகேஷின் சாதனையால் இந்தியாவே பெருமை கொள்கிறது. கேண்டிடேட்ஸ் தொடரை வென்ற குகேஷின் சாதனை அவரது அசாதாரண திறமையையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. அவரது சிறந்த செயல்திறன் கோடிக்கணக்கானவர்களை ஊக்குவிக்கிறது. இவ்வாறு வாழ்த்தியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
இந்நிலையில், எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக இளம் வீரர் குகேஷூக்கு வாழ்த்துகள். வெறும் 17 வயதில், குகேஷ் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன் தொடரில் சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.