விரிவுபடுத்தலாமே பள்ளிகளிலும் தேவை போலீஸ் அக்கா திட்டம்
விரிவுபடுத்தலாமே பள்ளிகளிலும் தேவை போலீஸ் அக்கா திட்டம்
UPDATED : பிப் 12, 2025 12:00 AM
ADDED : பிப் 12, 2025 11:16 AM

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கல்லுாரிகளில் செயல்படும் போலீஸ் அக்கா திட்டத்தை பள்ளிகளிலும் விரிவுபடுத்தினால் பள்ளி சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை கட்டுப்படுத்த வழிவகை செய்யலாம். அரசு இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.
மாவட்டம் முழுவதும் ஏராளமான கல்லுாரிகள் செயல்படுகிறது. இங்குள்ள கல்லுாரிகளில் மாணவிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் அரசு சார்பில் போலீஸ் அக்கா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கல்லுாரிகளிலும் படிக்கும் மாணவிகளுடன் அந்த பகுதியை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் தொடர்பில் இருப்பார்.
அவர்களுக்கென தனி வாட்ஸ் அப் குழுக்களும் பயன்பாட்டில் இருக்கும். தினமும் அந்த பெண் போலீஸ் மாணவிகளிடம் உரையாடல் நடத்தி பிரச்னை ஏதாவது இருந்தால் அதுகுறித்து விசாரித்து உடனடியாக அதை தீர்த்து வைக்கப்படுகிறது. மாணவிகளுக்கு யாரேனும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தால் அந்த பெண் போலீசிடம் ரகசியமாக புகார் அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை போலீசார் கண்காணிக்கின்றனர். தற்போது போச்சம்பள்ளி, மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் நடந்துள்ளது.
சில சம்பவங்களும் வெளியில் வராமல் உள்ளது. இதனால் குற்றவாளிகள் தப்பிக்கும் வகையிலான செயல்களும் நடக்கின்றன. இதை தவிர்க்க கல்லுாரிகளில் செயல்படும் போலீஸ் அக்கா திட்டத்தை பள்ளிகளிலும் விரிவுபடுத்த அரசு கவனம் செலுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகமும் இப்பிரச்னை குறித்து அரசுக்கு பரிசீலனை செய்ய வேண்டும். இதோடு மகளிர் போலீசார் அடிக்கடி பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
நல்லதொரு திட்டம்
திண்டுக்கல் வி.சி.க., மாவட்ட செயலாளர், மைதீன்பாவா கூறுகையில், பள்ளிக்குழந்தைகள் மத்தியில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்க போலீஸ் அக்கா திட்டத்தை கல்லுாரிகள் மட்டுமில்லாமல் பள்ளிகளிலும் விரிவுபடுத்த வேண்டும். இது நல்ல ஒரு திட்டம். குழந்தைகளுக்கு பெற்றோர்களும் தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என்ன பிரச்னையாக இருந்தாலும் பிள்ளைகள் தைரியமாக தெரிவிக்கும் வகையில் பெற்றோர்கள் இருக்க வேண்டும்.
போலீசார், குழந்தைகள் நல அலுவலர்கள், சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் மாதம் ஒருமுறை எல்லா பள்ளிகளிலும் ஆய்வு செய்து பள்ளி மாணவிகளிடம் கலந்துரையாடல் நடத்தி அவர்களிடம் விசாரிக்க வேண்டும். புகார்கள் இருந்தால் அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர்களும் தயங்காமல் பிள்ளைகளுக்கு நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்க போலீசில் புகாரளிக்க வேண்டும், என்றார்.