UPDATED : ஜூலை 27, 2024 12:00 AM
ADDED : ஜூலை 27, 2024 09:26 AM
லக்னோ:
உத்தர பிரதேச மாநில போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வுகான வினாத்தாள் கசிந்ததால், பிப்ரவரியில் நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. மறுதேர்வு ஆகஸ்ட் மாதம் 5 நாட்கள் நடத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநில போலீஸ் ஆட்சேர்ப்பு வாரிய, 60,244 கான்ஸ்டபிள் பணிக்கு கடந்த பிப்ரவரி மாதம், 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தேர்வு, மாநிலம் முழுதும் 75 மாவட்டங்களில் 2,835 மையங்களில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 16 லட்சம் பெண்கள் உட்பட 48 லட்சம் பேர் எழுதினர்.
இந்நிலையில், வினாத்தாள் கசிந்ததால் பிப்ரவரியில் நடந்த போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 23, 24, 25, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான மறுதேர்வு நடத்தப்படும் என உத்தர பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
தேர்வு எழுதுவோருக்கு அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் இலவசப் பயணம் அனுமதிப்படும் எனவும் உ.பி., அரசு கூறியுள்ளது. மேலும், இந்த முறை வினாத்தாள் கசிய விடுபவருக்கு, 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் உ.பி., அரசு எச்சரித்துள்ளது.

