தற்கொலைக்கு முயன்ற மாணவி கல்வி கட்டணம் தந்த போலீசார்
தற்கொலைக்கு முயன்ற மாணவி கல்வி கட்டணம் தந்த போலீசார்
UPDATED : ஜூலை 11, 2025 12:00 AM
ADDED : ஜூலை 11, 2025 08:37 AM
ஆவடி:
கல்விக் கட்டணம் செலுத்த முடியாத விரக்தியில், தற்கொலைக்கு முயன்ற மாணவியின் கல்வி கட்டணத்தை, ஆவடி போலீசாரே வழங்கினர்.
ஆவடி அருகே திருமுல்லைவாயல், கிழக்கு தென்றல் நகரைச் சேர்ந்தவர் வெங்கட் சாமுவேல், 45; இவரது மனைவி வசந்தி, 43. இவர்களது மகள் ஹெப்சிபா, 20. அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
ஹெப்சிபா, ஜூன் 18ம் தேதி, விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். பெற்றோர் எப்சிபாவை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருமுல்லைவாயல் போலீசார் விசாரித்தனர்.
படிப்பில் ஆர்வமுள்ள எப்சிபா, கல்லுாரியில் கடைசி இரண்டு பருவத்திற்கான கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்ததும், அதனால் தற்கொலைக்கு முயன்றதும் தெரிந்தது. சில நாட்களில், எப்சிபா குணமடைந்து வீடு திரும்பினார்.
எப்சிபாவை நேற்று முன்தினம் காவல் நிலையம் வருமாறு, திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் மற்றும் காவலர்கள் அழைத்துள்ளனர்.
அங்கு சென்ற எப்சிபா மற்றும் அவரது பெற்றோரிடம், கல்வி கட்டணமான, 50,600 ரூபாய் பணத்தை போலீசார் கொடுத்தனர். பிரச்னையை எதிர்த்து போராட வேண்டும் என, மாணவிக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.