தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துடன் புதுச்சேரி பல்கலைக்கழகம் ஒப்பந்தம்
தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துடன் புதுச்சேரி பல்கலைக்கழகம் ஒப்பந்தம்
UPDATED : பிப் 03, 2026 02:23 PM
ADDED : பிப் 03, 2026 02:26 PM

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகம், சென்னை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துடன் அதிகாரப்பூர்வமாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பிரகாஷ் பாபு முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பதிவாளர் குணசேகரன் மற்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் செந்தில்வேல், ஆகியோர் கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் மையத் தலைவர், பேராசிரியர் விக்டர் ஆனந்த்குமார், நுண்ணுயிரியல் துறை இணைப் பேராசிரியர் தில்லை சேகர், தேசிய சித்த மருத்துவ நிறுவன ஆராய்ச்சி குழு தலைவர், கிறிஸ்டியன், வாழ்க்கை அறிவியல் பள்ளி பேராசிரியர் திவாரி, மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இடைத்துறை ஆராய்ச்சி, தொழில்முனைவோர் வளர்ச்சி, பாடத்திட்ட மேம்பாடு, கல்வி மற்றும் பயிற்சி பரிமாற்றம், கூட்டாய்வு ஆய்வுகள், வேலைவாய்ப்புகள், மேலும் சித்த மருத்துவ அடிப்படையிலான தயாரிப்புகள் மற்றும் நடைமுறைகளில் தர உறுதிப்பாடு ஆகியவை ஊக்குவிக்கப்படவுள்ளன.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், புதுவைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகள் சென்னையில் உள்ள தேசிய சித்த நிறுவனத்துடன் தீவிரமாக ஒத்துழைக்க பல வழிகளை வழங்குகிறது.
நிகழ்ச்சியில், துணைவேந்தர் பிரகாஷ் பாபு பேசியதாவது: சித்த மருத்துவ முறையில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய மற்றும் நவீன மூலிகை மருத்துவத்தை மேம்படுத்தும் உயர்மட்ட முயற்சிகளில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் அனைத்து தரப்பினரும் ஈடுபட வழிவகுக்கும். மேலும், வளர்ந்து வரும் பாரம்பரிய மருத்துவ நடைமுறைகளை ஆதாரபூர்வமானதாக மாற்ற உதவும்.
தேசிய மற்றும் உலகளாவிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த புதுமையான, விரிவுபடுத்தக்கூடிய மாற்று சுகாதாரத் தீர்வுகளை உருவாக்குவதே எங்களின் கூட்டு இலக்காகும். இவ்வாறு அவர் பேசினார்.

