எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு 955 மாணவர்களுக்கு வரைவு சீட் ஒதுக்கீடு
எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு 955 மாணவர்களுக்கு வரைவு சீட் ஒதுக்கீடு
UPDATED : ஆக 15, 2025 12:00 AM
ADDED : ஆக 15, 2025 10:40 AM

புதுச்சேரி:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கால்நடை, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு முதற்கட்ட கணினி கலந்தாய்வு நடத்தி 955 பேருக்கு வரைவு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கால்நடை, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நேற்று முன்தினம் வரைவு மெரிட் லிஸ்ட்டினை சென்டாக் வெளியிட்டது. தொடர்ந்து, முதற்கட்ட கணினி கலந்தாய்வு நடத்தி வரைவு சீட் ஒதுக்கீடு செய்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., அரசு ஒதுக்கீட்டு இடங்களை பொருத்தவரை மொத்தமுள்ள 386 எம்.பி.பி.எஸ்., இடங்களில் 380 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., நிர்வாக இடங்களில் மொத்தமுள்ள 301 இடங்களில் 145 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தெலுங்கு, கிறிஸ்துவ சிறுபான்மையினருக்கான இடங்களும் உள்ளடக்கம்.
எம்.பி.பி.எஸ்., என்.ஆர்.ஐ., இடங்களை பொருத்தவரை மொத்தமுள்ள 116 இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. எம்.பி.பி.எஸ்., படிப்பினை பொருத்தவரை ஒட்டுமொத்தமாக 803 சீட்டுகள் உள்ளன. இதில் 641 இடங்கள் முதற்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படுகின்றது.
பி.டி.எஸ்., பல் மருத்துவ படிப்புகளை பொருத்தவரை 121 பி.டி.எஸ்., அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இதில் 116 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்வாக இடங்களை பொருத்தவரை மொத்தமுள்ள 180 சீட்டுகளில் 130 பேருக்கும், 5 என்.ஆர்.ஐ., இடங்களில் 3 மாணவர்களுக்கும் சீட் ஒதுக்கப் பட்டுள்ளது.
மொத்தமுள்ள 306 இடங்களில் 249 சீட்டுகள் பல்மருத்துவ படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்ப மாணவர் சேர்க்கை கடிதம் வழங்கப்பட உள்ளது. ஆயுர்வேதம் மொத்தமுள்ள 44 பி.ஏ.எம்.எஸ்., சீட்டுகளில் 39 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவம் நிர்வாக மற்றும் சுய நிதியில் மொத்தமுள்ள 22 சீட்டுகளில் அனைத்து இடங்களும் முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளது. இதேபோல் 4 என்.ஆர்.ஐ., இடங்களும் முழுதுமாக நிரப்பப்படுகிறது.
எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ படிப்பில் 1179 இடங்கள் உள்ளன. இதில் 955 சீட்டுகள் முதற்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படுவதாக சென்டாக் அறிவித்துள்ளது.

