UPDATED : நவ 28, 2024 12:00 AM
ADDED : நவ 28, 2024 08:16 AM
ஊட்டி:
ஜனாதிபதி திரவுபதி முர்மு, நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக, நேற்று ஊட்டி வந்தார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, டில்லியில் இருந்து நேற்று காலை விமானத்தில் கோவை வந்து, காரில் சாலை மார்க்கமாக மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியே மதியம், 12:30 மணிக்கு, ஊட்டி ராஜ் பவனுக்கு வந்தார்.
மாநில கவர்னர் ரவி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி., நிஷா ஆகியோர், அவரை வரவேற்றனர். குன்னுார் ராணுவ பயிற்சி கல்லுாரியில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
நீலகிரி பழங்குடியின மக்களை, ராஜ்பவனில் நாளை சந்திக்க உள்ளார். 30ம் தேதி காலை ஊட்டியில் இருந்து கோவை செல்லும் ஜனாதிபதி, அங்கிருந்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
ஹெலிகாப்டர் தவிர்ப்பு
டில்லியில் இருந்து விமானத்தில் கோவைக்கு வந்துள்ள ஜனாதிபதி, ஹெலிகாப்டரில் ஊட்டிக்கு வருவதாக இருந்தது. இதனால், ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் மற்றும் குன்னுார் ராணுவ ஹெலிபேடுகளை தயார்படுத்தி, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு, போலீசார் ஒத்திகையும் நடத்தினர்.
ஆனால், ஊட்டியில் நேற்று காலை மேக மூட்டம் நிலவியதால், ஹெலிகாப்டரில் வருவது தவிர்க்கப்பட்டு, சாலை மார்க்கமாக, ஜனாதிபதி காரில் ஊட்டி ராஜ் பவனுக்கு வந்தார்.