UPDATED : ஜூன் 12, 2024 12:00 AM
ADDED : ஜூன் 12, 2024 05:35 PM

கணக்கியல் மற்றும் நிதி துறைகளில் மதிப்புமிக்க தகுதியாக 'சர்ட்டிபைடு பப்ளிக் அக்கவுண்டன்ட் - சி.பி.ஏ.,' கருதப்படுகிறது. என்.ஏ.எஸ்.பி.ஏ., எனும் 'நேஷனல் அசோசியேஷன் ஆப் ஸ்டேட்போர்டு ஆப் ஸ்டேட் அக்கவுண்டன்சி' இச்சான்றிதழை வழங்குகிறது. பி.காம்., அல்லது சி.ஏ., பட்டம் பெற்ற இந்திய மணவர்கள் பிரத்யேக தகுதி பெற்ற பட்டயக் கணக்காளராகவும், அமெரிக்க தணிக்கை நடைமுறைகளை புரிந்து கொண்டு பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரியவும் இந்த சான்றிதழ் உதவியாக இருக்கும்.
இந்திய மாணவர்களுக்கான தகுதிகள்:
* பி. காம்., / பி.பி.ஏ., (நிதி) மற்றும் வணிகம், கணக்கியல், நிதி ஆகிய பாடப்பிரிவுகளில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் (அல்லது)* பி. காம்., / பி.பி.ஏ., (நிதி) மற்றும் சி.ஏ., சி.எம்.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., போன்ற ஏதேனும் ஒரு தொழில்முறை தகுதி பெற்றிருக்க வேண்டும் (அல்லது)* இந்தியாவில் உள்ள நாக்-ஏ அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் வணிகம், நிதி அல்லது கணக்குகளில் மூன்றாண்டு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்தியாவில் ஓர் ஆண்டு பல்கலைக்கழக கல்வி, 30 கிரெடிட்டுகளுக்கு சமமாக கணக்கிடப்படும் நிலையில், சி.பி.ஏ., தேர்வில் கலந்துகொள்ள ஒரு மாணவர் மொத்தம் 120 கிரெடிட்கள் பெற்றிருக்க வேண்டும். சி.பி.ஏ., உரிமத்திற்கு விண்ணப்பிக்க ஒரு மாணவருக்கு 150 கிரெடிட்கள் தேவை.
வெளிநாட்டில் பயிற்சி
வெளிநாடுகளில் பயிற்சி பெற விரும்பும் சி.பி.ஏ., வல்லுனர்கள், அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் பின்பற்றப்படும் நடைமுறை விதிகளை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கல்வி, தேர்வு, அனுபவம் மற்றும் உரிமத்திற்கான நெறிமுறைகள் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஐ.சி.பி.ஏ.,ன் தொழில்முறை நடத்தை விதிகளை கவனமுடன் பின்பற்றுவதுடன், ஆட்டோமேஷன், கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா அனலிட்டிக்ஸ், பிளாக்செயின் மற்றும் சைபர் செக்யூரிட்டி போன்ற நவீன தொழில்நுட்பங்களில் திறம்பட பணியாற்றுவதும் அவசியமாகிறது.
சரியான திட்டமிடல், நிதி மேலாண்மை, அர்ப்பணிப்பு மற்றும் நெறிமுறைகளை கடைப்பிடித்தால், நிதித்துறையில் முக்கியப் பணியாக கருதப்படும் சி.பி.ஏ., தகுதி பெறலாம். அதன்வாயிலாக, சர்வதேச அளவில் பிரகாசமான வாய்ப்புகளை பெற முடியும்.
-பங்கஜ் திங்ரா, நிறுவனர், பின்ட்ராம் குளோபல்.