தனியார் பள்ளி ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ்
தனியார் பள்ளி ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ்
UPDATED : மே 07, 2025 12:00 AM
ADDED : மே 07, 2025 07:58 AM
புதுச்சேரி:
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடந்தது.
புதுச்சேரி அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், கடந்த 10 நாட்களாக கல்வித்துறை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த 2ம் தேதி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நடத்திய பேச்சுவார்த்தையில், 5ம் தேதி கல்வித்துறை செயலர், இயக்குனரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி நேற்று அமைச்சர் நமச்சிவாயம், கல்வி கல்வித்துறை செயலர் பிரியதர்ஷினி, கல்வி செயலர் அருள், பீட்டர் ராஜேந்திரன், பாத்திமா மேல்நிலைப்பள்ளி முதல்வர் மகிமை, தனியார் பள்ளி சம்மேளன கவுரவத் தலைவர் வின்சென்ட் ராஜ் ஆகியோர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தையின் கல்வித்துறை செயலர் பிரியதர்ஷினி, பணியில் உள்ள ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இரண்டு நாட்களுக்குள் தயாரித்து கல்வித்துறை அமைச்சரிடம் சமர்ப்பிப்பதாக உறுதி அளித்தார்.
அதனைத் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சம்மேளன பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.
பணி நிரந்தரம் தொடர்பான பிரச்னைகளை சுமூகமாக தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுடத்த கல்வித் துறை அமைச்சருக்கும், போராட்டத்திற்கு ஆதரவளித்த அரசு ஊழியர் சம்மேளனத்திற்கும் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் ஊழியர்களுக்கும் தனியார் பள்ளி சம்மேளனம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

