sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் பள்ளிகள் அங்கீகாரத்திற்கு பல லட்சம் வசூல் வேட்டை

தனியார் பள்ளிகள் அங்கீகாரத்திற்கு பல லட்சம் வசூல் வேட்டை

தனியார் பள்ளிகள் அங்கீகாரத்திற்கு பல லட்சம் வசூல் வேட்டை


UPDATED : ஏப் 10, 2026 10:57 AM

ADDED : ஏப் 10, 2026 11:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 10, 2026 10:57 AM ADDED : ஏப் 10, 2026 11:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
தமிழகத்தில் ஒவ்வொரு தனியார் பள்ளியும் அங்கீகாரத்தை புதுப்பிக்க, ரூ.30 லட்சம் வரை அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்க வேண்டியுள்ளது. அதிகாரிகளின் லஞ்ச வேட்டைக்கு வழிவகுக்கும் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகார முறையை மாற்றி, 10 ஆண்டுகள் வரை, நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நிரந்தர அங்கீகாரம் என்ற முறையை மாற்றி, தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரத்தை புதுப்பிப்பது 2021ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது. ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு அதிகாரிக்கும் பணம் என, பல லட்சம் வரை லஞ்சம் கொடுத்தால் தான் அங்கீகாரம் புதுப்பிக்கப்படுவதாக தனியார் பள்ளி நிர்வாகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

பணம் கொடுக்காவிட்டால்...
தனியார் பள்ளி தாளாளர் ஒருவர் கூறியதாவது:

அங்கீகாரத்திற்கு அரசு குறிப்பிட்டுள்ள வசதிகளுடன் நிலம், கட்டட ஆவணங்கள் சரியாக இருக்க வேண்டும். முதலில் பள்ளிக்கு கலெக்டரால் அங்கீகரிக்கப்பட்ட பொறியாளரிடமிருந்து, கட்டடத்திற்கான உறுதிச் சான்றை பெற வேண்டும்.

பின்னர், தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று, சுகாதார சான்றிதழை பெற வேண்டும். இந்த அலுவலகங்களில், சான்றிதழுக்கு குறைந்தது ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை லஞ்சமாக அளிக்க வேண்டும். பணம் கொடுக்காவிட்டால் சான்றிதழ் கிடைக்காது.

மேலும், பள்ளி வளாகங்களில் அமைக்க வேண்டிய தீயணைப்பான்களை தீயணைப்பு துறை அதிகாரிகள் சொல்லும் இடத்தில் வாங்க உத்தரவிடுவர். விலை அதிகமாக இருப்பதுடன், தரமும் இருக்காது. பெறப்பட்ட சான்றிதழை எல்லாம் இணைத்து தாசில்தாரிடம் கட்டடத்திற்கான உரிமைச் சான்றிதழ் பெற வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்தாலும் அதிகாரிகளை நேரில் சந்தித்தால் தான் வேலை நடக்கும். மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து, ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை தாசில்தாருக்கு லஞ்சமாக கொடுக்க வேண்டும். பணம் கொடுத்தாலும் வருவாய்துறை பணிகளை காரணம் காட்டி உடனடியாக ஆய்வுக்கு வரமாட்டார்.

நிரந்தர அங்கீகாரம்

தீயணைப்பு, சுகாதாரம் மற்றும் தாசில்தார் அலுவலகத்திலே குறைந்தது, 20 நாட்களுக்கு மேல் ஆகிறது. எல்லா சான்றிதழ்களையும் பெற்று தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பிக்கும் போது மூன்று மாதங்களுக்கு மேலாகிவிடும்.

டி.இ.ஓ., ஆவணங்களை சரிபார்த்து, நேரில் பார்வையிட்டு இயக்குனரகத்திற்கு பைல்களை பரிந்துரைக்க வேண்டும். பள்ளிக்கேற்ப பணம் வசூலிப்பதிலே மாவட்ட கல்வி அதிகாரிகள் குறியாக இருப்பர். ஆறு மாதங்களுக்கு பிறகு இயக்குனரகத்திற்கு அனுப்பப்படும் கோப்புகள் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் வைக்கப்படுகின்றன.

பள்ளிகளை பொறுத்து, ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை வசூலிக்கின்றனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பெயரை சொல்லியே வெளிப்படையாக அதிகாரிகள் பணம் வசூலிக்கின்றனர்.

பணம் கொடுக்காத பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு தொடர்ந்து நோட்டீஸ் அனுப்புகின்றனர். வேறு வழியின்றி பள்ளிகள் பணத்தை கொடுக்கின்றன. இதைத் தடுக்க சரியான ஆவணங்களை சமர்ப்பித்து, வசதிகளை மேம்படுத்தும் பள்ளிகளுக்கு குறைந்தது 10 ஆண்டுகள் வரை நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகாரிகளுக்கு அச்சமில்லை

விண்ணப்பித்து மூன்று மாதங்களுக்குள் அங்கீகாரம் புதுப்பிக்க வேண்டும். ஆனால், ஆறு மாதம் முதல் ஆண்டுக்கணக்கில் நிலுவை வைக்கப்படுகிறது. தீயணைப்பு, சுகாதாரம் சான்றிதழ்கள், ஓராண்டில் காலாவதியாகவிடும். மீண்டும் எல்லா சான்றிதழுக்கும் முதலிருந்து லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. மேல்மட்டத்தில் இருந்தே லஞ்சம் வாங்குவதால் அதிகாரிகளுக்கு அச்சமில்லை.

இது தவிர, ஒவ்வொரு ஆண்டும் எப்.சி., பெற ஆர்.டி.ஓ., அலுவலங்களுக்கு லஞ்சம் கொடுப்பதுடன் ஆர்.டி.ஓ., அதிகாரிகள் சொல்லும் இடத்திலேயே பள்ளி வாகனங்களுக்கான உதிரி பாகங்களை வாங்க வேண்டும்.

கட்சி நிகழ்ச்சிகளுக்கு பள்ளி வாகனங்களை அனுப்பவும் நிர்பந்திக்கின்றனர். ஒவ்வொரு பள்ளியிடமும் ஆண்டுக்கு ஒரு லட்சம் வரை அதிகாரிகள் நிதி வசூலிக்கின்றனர். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை அங்கீகார பணிக்காக அலைவதால் மாணவர்களின் கல்வி செயல்பாடுகள் பாதிக்கின்றன.

அங்கீகாரமின்மையால் நிர்வாக பணிகளும் முடங்கியுள்ளன. மாணவர்களின் பாதுகாப்பு, கல்விதரத்தை உறுதிசெய்வதற்காக கொண்டுவரப்பட்ட விதிமுறைகளை, லஞ்ச வேட்டைக்காக மட்டுமே கல்வித்துறை அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர்.

-நந்தகுமார், மாநில பொதுச்செயலாளர், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us