1ம் வகுப்பு மாணவர் சேர்க்கை விவகாரம் நீதிமன்றத்தை நாட தனியார் பள்ளிகள் முடிவு
1ம் வகுப்பு மாணவர் சேர்க்கை விவகாரம் நீதிமன்றத்தை நாட தனியார் பள்ளிகள் முடிவு
UPDATED : ஏப் 23, 2025 12:00 AM
ADDED : ஏப் 23, 2025 09:26 PM
பெங்களூரு:
முதலாம் வகுப்பு சேருவதற்கான வயது வரம்பில் தளர்வு அளித்தற்கு எதிராக தனியார் பள்ளி சங்கங்கள் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதலாம் வகுப்பில் சேரும் மாணவ - மாணவியருக்கு 6 வயது நிரம்பி இருக்க வேண்டும் என, மத்திய அரசு கூறியது. இந்த வயது வரம்பை குறைக்க வேண்டும் என, கர்நாடக கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பாவிடம் பெற்றோர் பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இதனை ஏற்று, நடப்பாண்டில் முதலாம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு 5 வயது 5 மாதங்கள் நிரம்பி இருந்தால் போதும். அடுத்தாண்டு முதல் 6 வயது ஆகி இருக்க வேண்டும் என, மது பங்காரப்பா சில நாட்களுக்கு முன்பு கூறினார்.
இதற்கு சி.பி.எஸ்.இ., தன்னாட்சி பள்ளிகளின் சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசின் முடிவால் கடந்த மூன்று ஆண்டுகளாக விதிகளை கடைபிடித்த லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
இதனால், வயது வரம்பு தளர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என, சங்கம் கூறியது. இதற்கிடையில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் மற்ற தனியார் பள்ளி சங்கங்களும் தற்போது வயது தளர்விற்கு எதிராக போர்க்கொடி துாக்கி உள்ளன.
அரசின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை நாட தனியார் பள்ளிகள் சங்கம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல தனியார் பள்ளிகளும் சங்கங்களும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளதால், முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

