UPDATED : மே 19, 2026 04:59 PM
ADDED : மே 19, 2026 05:01 PM
விழுப்புரம்:
விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 22ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் வாயிலாக, தனியார் துறையில் பணி வாய்ப்பினை பெற விரும்பும் படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில், மாதம் தோறும் மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமும், ஆண்டிற்கு இரு முறை பெரிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, மே மாதத்திற்கான சிறிய தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மே 22ம் தேதி நடக்கிறது. விழுப்புரம் வேலை வாய்ப்பு மையத்தில் நடக்கும் இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட வேலை அளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று 500க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி முதல், பட்டப்படிப்பு வரையும், ஐ.டி.ஐ.., போன்ற கல்வித் தகுதியுடைய வேலை தேடும் இளைஞர்கள் முகாமில் பங்கேற்கலாம்.
இம்முகாமில் பங்கேற்போருக்கு வேலை வாய்ப்பு பதிவு, ரத்து செய்யப்பட மாட்டாது. முகாமில், அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, சுய விபர குறிப்புகளுடன் பங்கேற்று பயன் பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
