பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில் தமிழகம் சேராததால் சிக்கல்: அரசு பள்ளி நுாலகங்கள் முடங்கும் அபாயம்
பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில் தமிழகம் சேராததால் சிக்கல்: அரசு பள்ளி நுாலகங்கள் முடங்கும் அபாயம்
UPDATED : ஜன 22, 2025 12:00 AM
ADDED : ஜன 22, 2025 11:04 AM

சென்னை:
புதிய கல்வி கொள்கை, பி.எம்.ஸ்ரீ., திட்டங்களை ஏற்காததால், தமிழக அரசு பள்ளி நுாலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் 14,500 பள்ளிகளை தேர்வு செய்து, பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் என பெயரிட்டு, அவற்றை மேம்படுத்துவதற்கான செயல் திட்டத்தை, மத்திய அரசு உருவாக்கி உள்ளது. புதிய கல்விக் கொள்கையை மேம்படுத்தும் வகையில், மத்திய,- மாநில அரசுகளின் கூட்டு நிதியில், இந்தாண்டு மத்திய அரசின், 839 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், 599 நவோதயா பள்ளிகள் மற்றும் 8,639 மாநில பள்ளிகள் என, மொத்தம் 10,077 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதற்காக வரும் 2027 வரையிலான கல்வியாண்டுகளுக்கு, மொத்தம் 27,360 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 18,128 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கும்; மீதியை மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
இதன்படி, தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் பெயருக்கு முன், பி.எம்.ஸ்ரீ., என்று எழுத வேண்டும்; அப்பள்ளி, புதிய கல்வி கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதிய கல்வி கொள்கையின்படி, ஹிந்தி மொழியை ஏற்க வேண்டும் என்பதால், தமிழகம் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், நாடு முழுதும் ஒரே கல்வி திட்டத்தை கடைப்பிடிக்காததால், ஏற்கனவே தமிழகத்துக்கான, சமக்ர சிக்சா அபியான் என்ற எஸ்.எஸ்.ஏ., நிதி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிதி வாயிலாக, அரசு பள்ளி நுாலகங்களுக்கு நுால்கள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது, நுால்கள் வாங்க முடியாமல் உள்ளது.
இதுகுறித்து, அரசு பள்ளி நுாலகர்கள் கூறியதாவது:
பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில் கையெழுத்திடாததால், தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதி நிறுத்தப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.ஏ., என்ற ஒருங்கிணைந்த கல்வி திட்டம், புதிய கல்வி கொள்கை உருவாக்குவதற்கு முன்பிருந்தே செயல்படுத்தப்படுகிறது. அதை புதிய கல்வி கொள்கையுடன் இணைத்து, ஏற்கனவே தமிழகம் பெற்று வந்த நிதியை மத்திய அரசு நிறுத்தி உள்ளது. இதனால், கல்வி சார்ந்த கைத்தொழில், விளையாட்டு, நுாலகம் உள்ளிட்டவற்றை செயல்படுத்த முடியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.