பிஎச்.டி., வாய்மொழித்தேர்வு முடித்த மாணவர்களுக்கு சிக்கல்
பிஎச்.டி., வாய்மொழித்தேர்வு முடித்த மாணவர்களுக்கு சிக்கல்
UPDATED : ஏப் 30, 2024 12:00 AM
ADDED : ஏப் 30, 2024 09:15 AM

மதுரை:
மதுரை காமராஜ் பல்கலையில் பிஎச்.டி., வாய்மொழித் தேர்வு (வைவா ஓஸ்) முடித்தும் சிண்டிகேட் ஒப்புதல் கிடைக்காததால் 190 ஆய்வு மாணவர்கள் டி.ஆர்.பி., உதவிப் பேராசிரியர்கள் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
இப்பல்கலையில் 190 பேர் இந்தாண்டு பிஎச்.டி., படிப்புக்கான ஆய்வறிக்கை சமர்ப்பித்து வாய்மொழி தேர்வுகளை முடித்துள்ளனர். இதற்கான ஒப்புதலை சிண்டிகேட் அளிக்க வேண்டும். அதன் பின் தற்காலிக சான்றிதழ் (புரவிஷனல்) வழங்கப்படும்.
நிரந்தர பட்டச்சான்று கிடைக்கும் வரை தேர்வுகள், பணி நியமனங்களுக்கு தேவையான தகுதியாக, இந்த தற்காலிக சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.
தற்போது தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்கள் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஏப்.,29 கடைசி நாள்.
யு.ஜி.சி., வழிகாட்டுதல்படி இப்பணிக்கு முதுகலை படிப்புகளுடன் பிஎச்.டி., அவசியம். ஆனால் இத்தேர்வுக்கு மதுரை காமராஜ் பல்கலையில் பிஎச்.டி., படித்த 190 பேருக்கு தற்காலிக சான்றிதழ் கிடைக்காததால் அவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:
பல ஆண்டுகளுக்கு பின் நேரடி உதவிப் பேராசிரியர் பணிக்கான அறிவிப்பு டி.ஆர்.பி., வெளியிடப்பட்டுள்ளது. நாங்கள் உரிய நேரத்தில் பி.எச்டி., ஆய்வறிக்கை சமர்ப்பித்து, வாய்மொழித் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றோம். அதன் பின் சிண்டிகேட் ஒப்புதலை பெறுவது பல்கலையின் பொறுப்பு. ஆனால் பல மாதங்களாக சிண்டிகேட் கூட்டம் நடக்கவில்லை எனக் கூறுகின்றனர்.
இதுகுறித்து உயர்கல்வி செயலாளர், துணைவேந்தர், பதிவாளர், சிண்டிகேட் உறுப்பினர்கள் ஆகியோரிடமும் முறையிட்டோம். ஆனால் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. டி.ஆர்.பி., தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்கள் தான் உள்ளன.
விரைவில் தற்காலிக சான்றிதழ் வழங்க துணைவேந்தர் குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.