பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்தானதால் சிக்கல்; படிப்பில் மாணவர்கள் மெத்தனம்
பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்தானதால் சிக்கல்; படிப்பில் மாணவர்கள் மெத்தனம்
UPDATED : அக் 11, 2025 10:04 AM
ADDED : அக் 11, 2025 10:05 AM

பொள்ளாச்சி:
பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், அரசு பள்ளி மாணவர்கள் சிரத்தை எடுக்காமல் படிப்பில் மெத்தனம் காட்டுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்புக்கு முக்கியத்துவம் தராமல், பெயரளவுக்கு பாடங்களை நடத்தி, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு மாணவ, மாணவியரை தயார்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனால், உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளில், மாணவ, மாணவியர் சிறப்பான பங்களிப்பை வழங்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தீர்வு காண, பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு, 2017 - 18ம் கல்வியாண்டில் இருந்து, பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆக., மாதம், மாநில அரசின் மாநில கல்விக் கொள்கையின்படி, பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக, மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்காது எனவும் அரசு தெரிவித்தது.
ஆனால், தற்போதைய சூழலில், அரசு பள்ளிகளை பொறுத்தமட்டில், பிளஸ் 1 மாணவர்கள், படிப்பில் சிரத்தை எடுக்காமல் இருப்பதாகவும், ஆண்டு இறுதித் தேர்வு விடைத்தாள்கள், அந்தந்த பள்ளியிலேயே திருத்தம் செய்யப்படும் என்பதால், மிகவும் அலட்சிய போக்குடன் இருப்பதாக, ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஏற்கனவே, 1 முதல் 8ம் வகுப்பு வரை, 'ஆல்பாஸ்' திட்டம் நடைமுறையில் உள்ளது. மறைமுகமாக, 9ம் வகுப்பு வரை இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டும் வருகிறது. அதனால், எவ்வித சிரமமும் இல்லாமல், அனைத்து மாணவர்களும் 10ம் வகுப்புக்கு முன்னேறுகின்றனர்.
அங்கு, அவர்களுக்கு தீவிர எழுத்து மற்றும் வாசிப்பு பயிற்சி அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தற்போது, பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால், அரசு பள்ளிகளை பொறுத்தமட்டில் பெரும்பாலான மாணவர்கள் அலட்சியமாக உள்ளனர்.
தனியார் பள்ளிகளை பொறுத்தமட்டில், தேர்ச்சி விகிதத்தை கருத்தில் கொண்டு, பிளஸ் 2 மாணவர்கள் மீதே ஆசிரியர்களின் கவனம் உள்ளது.
இவ்வாறு, கூறினர்.