பல்கலையில் மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்; விபரம் கேட்கும் உச்ச நீதிமன்றம்
பல்கலையில் மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்; விபரம் கேட்கும் உச்ச நீதிமன்றம்
UPDATED : ஜன 04, 2025 12:00 AM
ADDED : ஜன 04, 2025 09:12 AM

புதுடில்லி:
பல்கலை மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றிய விபரங்களின் பட்டியலை தாக்கல் செய்யும்படி, யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக்கழக மானிய குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
வழிகாட்டு நெறிமுறை
உயர்கல்வி நிலையங்களில் மாணவர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்குகள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், உயர்கல்வி நிலையங்களுக்கான பல்வேறு விதிமுறைகள் ஏற்கனவே அமலில் உள்ளன.
ஆனால், அவை அனைத்தும் செயல்பாட்டில் இருக்கிறதா என்பது தான் மிகப்பெரிய கேள்வி. 2012ல் உருவாக்கப்பட்ட விதிமுறைகளின் கீழ், ஜாதி ரீதியிலான பாகுபாடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என சொல்கிறது. ஆனால் இங்குள்ள 820 பல்கலைகளில் இதை செயல்படுத்துவதற்காக எத்தனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என தெரியவில்லை, என்றார்.
எதிர்பார்ப்பு
மேலும், இதில் பல்கலைக்கழக மானிய குழுவின் செயல்பாடுகள் தான் முதன்மையானவை. 2011 - 2024 வரையிலான காலத்தில், ஐ.ஐ.டி.,க்களில் மட்டும், 115 தற்கொலைகள் நடந்துள்ளன, என்ற புள்ளி விபரங்களையும் அவர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மானிய குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சில பரிந்துரைகள் ஏற்கப்பட்டு புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகிறது, என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தற்போது இந்த நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ள விவகாரத்தின் தன்மையை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏற்கனவே உள்ள விதிமுறைகள் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.
மத்திய அரசு மற்றும் பல்கலை மானிய குழுவிட மிருந்து தரவுகளை எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரங்கள் தொடர்பாக ஏதேனும் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தால், அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
நடவடிக்கை
பல்கலைகளில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது, பதிவு செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கை, அவற்றில் எத்தனை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது போன்ற அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.