தனியார் பள்ளி கட்டடங்களுக்கு அனுமதி பெறுவதில் சிக்கல்; நடவடிக்கை எடுக்க உத்தரவு
தனியார் பள்ளி கட்டடங்களுக்கு அனுமதி பெறுவதில் சிக்கல்; நடவடிக்கை எடுக்க உத்தரவு
UPDATED : நவ 07, 2025 08:32 AM
ADDED : நவ 07, 2025 08:33 AM
சென்னை:
'தனியார் பள்ளிகளின் கட்டடங்களுக்கு, நகர் ஊரமைப்பு துறை மற்றும் சி.எம்.டி.ஏ., அனுமதி பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை நிவர்த்தி செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக, தனியார் பள்ளிகள் இயக்குநர், கடந்த மார்ச்சில் அளித்த பரிந்துரைகளை பரிசீலித்து, தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க, கல்வித் துறை செயலருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அகில இந்திய தனியார் கல்வி நிறுவன சங்கத்தின் மாநில பொதுச் செயலர் பழனியப்பன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ''இது தொடர்பாக, தனியார் பள்ளிகள் தனித்தனியாக, கல்வித் துறை முதன்மை செயலருக்கு, மனு அளிக்க வேண்டும்.
''இந்த மனுக்களை, தனியார் பள்ளிகளின் முன்னாள் இயக்குநர் அரசுக்கு அளித்த பரிந்துரையின்படி, மூன்று மாதத்துக்குள் பரிசீலனை செய்து, தனியார் பள்ளிகளின் கட்டடங்களுக்கு, நகர் ஊரமைப்பு துறை மற்றும் சி.எம்.டி.ஏ., அனுமதி பெறுவதில் ஏற்பட்டு இருக்கும் சிக்கல்களை நிவர்த்தி செய்ய, கல்வி துறை முதன்மை செயலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என உத்தரவிட்டார்.

