ஒரு வாரத்தில் பேராசிரியர் நியமன அறிவிப்பு: அமைச்சர் செழியன் தகவல்
ஒரு வாரத்தில் பேராசிரியர் நியமன அறிவிப்பு: அமைச்சர் செழியன் தகவல்
UPDATED : அக் 10, 2025 10:18 AM
ADDED : அக் 10, 2025 10:20 AM

திருச்சி:
“தமிழக கல்லுாரிகளில், நிரந்தர பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு, ஒரு வாரத்தில் வெளியிடப்படும்,” என, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள சீதாலட்சுமி ராமசுவாமி கல்லுாரியின் பவள விழாவில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன் பங்கேற்றனர்.
அப்போது, அமைச்சர் செழியன் கூறியதாவது:
கல்லுாரிகளில், நிரந்தர பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், 4,000 நிரந்தர பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் குறுக்கீடுகளால் தாமதம் ஏற்பட்டது.
நீதிமன்றத்தில் நிபந்தனைகள் விதிக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட எண்ணிக்கை தவிர்த்து, 2,740 நிரந்தர பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். ஒரு வாரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகி, ஒரு மாதத்தில் விண்ணப்பங்கள் பெறப்படும். அதன்பின், அவர்களுக்கான தேர்வு நடத்தி, நிகழாண்டிலேயே பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர்.
உயர் கல்விக்கு, கவர்னர் தொடர்ந்து இடைஞ்சலாக இருக்கிறார் என்பதை, அவ்வப்போது சொல்லி வருகிறோம். அரசு செய்யும் காரியங்களுக்கு கவர்னர் துணைநிற்க வேண்டும். ஆனால், முட்டுக்கட்டை போடும் முன்னுதாரணம் தமிழக கவர்னர்.
சட்டத்தை நிலைநாட்டுவதற்கு கூட, நீதிமன்றத்தை அரசு நாடும் நிலைமையை உருவாக்கி இருக்கிறார் கவர்னர். உயர் கல்விக்கும், தமிழகத்துக்கும் தடையாக இருப்பவர் அவரே. அந்த தடைகளை முறியடித்து, உயர் கல்வியை உயர்ந்த இடத்திற்கு உயர்த்தி தருவார் முதல்வர் ஸ்டாலின்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.