கோர் இன்ஜினியரிங் படிப்பிற்கு என்றும் மவுசு பேராசிரியர் பென்ரூபன் பளீச்
கோர் இன்ஜினியரிங் படிப்பிற்கு என்றும் மவுசு பேராசிரியர் பென்ரூபன் பளீச்
UPDATED : மார் 31, 2025 12:00 AM
ADDED : மார் 31, 2025 09:16 AM
புதுச்சேரி :
புதுப்புது படிப்புகள் வந்தாலும் கோர் இன்ஜினியரிங் படிப்பிற்கு என்றைக்கும் மவுசு உண்டு என கோவை ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லுாரி பேராசிரியர் பென்ரூபன் பேசினார்.
வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பிளஸ் 2 முடித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்புகள் சேர வேண்டும் என்பதே கனவாக இருக்கும். இன்ஜினியரிங் படிப்பினை பொருத்தவரை கோர் இன்ஜினியரிங், சர்க்யூட் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் என மூன்று பிரிவுகள் உள்ளன.
சிவில், மெக்கானிக், எலக்ட்ரீக்கல் என்பது தான் கோர் இன்ஜினியரிங், என்னதான் புதுப்புது பொறியியல் படிப்புகள் வந்து கொண்டிருந்தாலும், இந்த அடிப்படை பொறியியல் படிப்புகளுக்கும் என்றைக்குமே மவுசு இருக்கும்.
சர்க்யூட் இன்ஜினியரிங் படிப்புகள் என்பது இ.சி.இ., இ.இ.இ., இ அண்ட் ஐ., பையோமெடிக்கல் இன்ஜினியரிங் படிப்புகளை குறிக்கும்.
கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் என்பது சி.எஸ்.இ., ஐ.டி., ஆர்ட்டிபிஷியல் இன்டிலிஜென்ஸ், மெஷின் லேர்னிங், இன்டர்நெட் ஆப் திங்க்ஸ், சைபர் செக்யூரிட்டி, கம்ப்யூட்டர் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளை குறிக்கும்.
இந்த மூன்று வகை இன்ஜினியரிங் படிப்புகளிலும் சம வாய்ப்புகள் தான் உள்ளன. நன்றாக படித்தால் வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கும். 20 ஆண்டுகளுக்கு முன் இ.சி.இ., படிப்பிற்கு தான் மவுசு. ஆனால் இப்போது மாணவர்களின் எண்ணம் தலைகீழாக உள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பக்கம் தான் மாணவர்களின் கவனம் உள்ளது. அண்ணா பல்கலையில் கடந்தாண்டு தரவரிசை பட்டியலில் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் 52 மாணவர்களில், 32 பேர் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்பினை தேர்வு செய்தனர். இது தான் கள நிலவரம்.
பொதுவாகவே இன்ஜினியரிங் படிப்பினை எது எடுத்து படித்தாலும் எதிர்காலம் நன்றாகவே இருக்கும். இருப்பினும் படிக்கும்போது உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக தேர்வு செய்துள்ள இன்ஜினியரிங் படிப்பில் உங்களுடைய பலம், பலவீனம் எது என்பதை தெளிவாக அறிந்து கொண்டே இலக்கினை நோக்கி முன்னேறி கொண்டே இருக்க வேண்டும். அடுத்து டிகிரியுடன் வேலைக்கான மென் திறன்களையும் வளர்த்து கொண்டு மற்றவர்களிடமிருந்து தனித்துவமாக இருக்க வேண்டும். அத்துடன் துறை சார்ந்த நிபுணர்களிடமும் தொடர்பில் இருக்க வேண்டும்.
அந்த காலத்தில் படிப்பு முடிந்த பிறகு ஒவ்வொரு துறையாக ஏறி இறங்கி வேலை தேடுவோம். இன்றைக்கு அப்படி இல்லை. லிங்டு இன் இந்தியாவில் உங்களை பற்றிய தனித்துவத்தை பகிரும்போது, அவர்களே உங்களை தேடி வந்து வேலைக்கு அமர்த்துகின்றனர். அந்த அளவிற்கு தொழில்நுட்பங்கள் உங்களை தேடி வர துவங்கியுள்ளன.
எனவே நீங்கள் எந்த இன்ஜினியரிங் படிப்பினை தேர்ந்தெடுத்தாலும் ஆர்வத்தோடும், ஈடுபாட்டுடன் படித்தால் கண்டிப்பாக சாதிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.