விடைத்தாள் திருத்த பணி புறக்கணிக்கும் பேராசிரியர்கள்
விடைத்தாள் திருத்த பணி புறக்கணிக்கும் பேராசிரியர்கள்
UPDATED : ஜூன் 20, 2026 09:44 AM
ADDED : ஜூன் 20, 2026 09:44 AM
சென்னை:
ஊக்கத்தொகை வழங்காமல் சென்னை பல்கலை நிலுவையில் வைத்துள்ளதால், விடைத்தாள் திருத்தப் பணிகளை புறக்கணிக்க, பேராசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
சென்னை பல்கலைக்கழகின்கீழ் செயல்படும் 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை பல்கலையே நடத்தி வருகிறது.
இதில், விடைத்தாள் திருத்தப் பணியில் ஈடுபடும் பேராசிரியர்களுக்கு, இளநிலைப் படிப்பு விடைத்தாளுக்கு, 12 ரூபாய்; முதுநிலைப் படிப்பு விடைத்தாளுக்கு, 15 ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
கடந்த இரண்டு செமஸ்டர் தேர்வுகளுக்கான ஊக்கத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால், மே மாதம் நடந்த செமஸ்டர் தேர்வுகளின் விடைத்தாள் திருத்தப் பணிகளை புறக்கணிக்க பேராசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். ஆங்கில பாட விடைத்தாள்களின் திருத்தப் பணிகளை, ஏற்கனவே புறக்கணித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதே நிலை தொடர்ந்தால், செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என, கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
