பல்கலை பதிவாளரை கண்டித்து பேராசிரியர்கள் போராட்டம்
பல்கலை பதிவாளரை கண்டித்து பேராசிரியர்கள் போராட்டம்
UPDATED : ஜூலை 28, 2026 06:36 PM
ADDED : ஜூலை 28, 2026 06:36 PM
வடவள்ளி:
பாரதியார் பல்கலையில், பதிவாளர் ராஜவேல் தங்களின் கோரிக்கைகளை ஏற்க மறுப்பதாகக்கூறி, பாரதியார் பல்கலை ஆசிரியர்கள் நலச்சங்க தலைவர் வசந்த் தலைமையில், பேராசிரியர்கள், நேற்று பல்கலைப் பதிவாளர் ராஜவேலை சந்திக்க சென்றனர்.
அப்போது, பதிவாளர் தங்களை சந்திக்க மறுப்பதாக கூறி, பதிவாளர் அறை முன் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
வசந்த் கூறுகையில், “பல்கலையில் உதவி பேராசிரியர்களை இணை பேராசிரியர்களாகவும், இணை பேராசிரியர்களை பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு அளிப்பதை தாமதப்படுத்தி வருகின்றனர். கலைப்பிரிவு டீன் நியமனத்தில் விதிகளை மீறி பதிவாளர் செயல்பட்டுள்ளார். இதுகுறித்து பேச சென்ற போது வெளியே அனுப்பிவிட்டார்,” என்றார்.
பல்கலை பதிவாளர் ராஜவேல் கூறுகையில், “174 பேருக்கு பதவி உயர்வுக்கான முதற்கட்ட நடவடிக்கை ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டது. டீன் நியமிப்பது, துறை செயலர் என்பதால், தகுதியானவர்கள் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது,” என்றார்.
