UPDATED : ஜூன் 20, 2025 12:00 AM
ADDED : ஜூன் 20, 2025 10:44 AM
மதுரை:
மதுரை காமராஜ் பல்கலையில் பதவி உயர்வு (சி,ஏ.எஸ்.,) வழங்க கோரி பதிவாளர் அறை முன் பேராசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பதவி உயர்வு மூன்று ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. பதவி உயர்வுகளுக்கான ஒப்புதல் வழங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்து பல்கலை பேராசிரியர் நலச் சங்கம் (மூபா) சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், மூபா அவசர கூட்டம் நேற்று நடந்தது. அதில் பதிவாளர் அறை முன் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மதியம் 2:00 மணி வரை பதிவாளர் அறைமுன் தரையில் அமர்ந்து பேராசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து மூபா பொதுச் செயலாளர் முனியாண்டி கூறுகையில், பலமுறை கோரிக்கை விடுத்தும் சிண்டிகேட் உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளர், நிதிக் குழுக்களில் இருந்து எவ்வித பதிலும் இல்லை. பதிவாளரும் முரணான பதில்களை அளித்து குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.
இதுகுறித்து சென்னையில் உயர்கல்வி அதிகாரிகளை பல்கலை குழு சந்தித்து குறைகளை தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.