மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் அறைக்குள் பேராசிரியர்கள் போராட்டம்
மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் அறைக்குள் பேராசிரியர்கள் போராட்டம்
UPDATED : அக் 31, 2025 09:24 AM
ADDED : அக் 31, 2025 09:25 AM

 மதுரை: 
மதுரை காமராஜ் பல்கலையில் அதிகாரிகள் அரசியல் செய்வதால் பேராசிரியர்களுக்கான பதவி உயர்வு இழுத்தடிக்கப்படுகிறது. இதை கண்டிக்கும் வகையில் பதிவாளர் அறைக்குள் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நேற்று துவக்கினர்.
இப்பல்கலையில் 2022 முதல் பேராசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்கப்படவில்லை. தகுதியிருந்தும் பதவி உயர்வு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உயர்கல்வி அமைச்சர் கோவிசெழியன், கன்வீனர் சுந்தரவள்ளி உள்ளிட்டோரிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதையடுத்து 'மூபா' சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதுதொடர்பாகவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நேற்று காலை 10:00 மணி முதல் நுாற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் விடுப்பு எடுத்து பதிவாளர் அறைக்குள் சென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 'மூபா' பொதுச் செயலாளர் முனியாண்டி தலைமை வகித்தார். தலைவர் ஆரோக்கியதாஸ், பொருளாளர் சண்முகையா முன்னிலை வகித்தனர்.
'போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை' என பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் துறைவாரியாக பேராசிரியர்களின் வருகை பதிவை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார். ஆனாலும் அனுமதி மீறி பேராசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் பதிவாளர் அறைக்கு வந்து பேச்சு நடத்தி 'அனுமதியின்றி போராடினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்தனர். அதற்கு பேராசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் போலீசார் அங்கிருந்து சென்றனர்.
'மூபா' பொதுச் செயலாளர் முனியாண்டி கூறியதாவது: 
2022ல் பதவி உயர்வுக்கான விண்ணப்பங்கள் பெற்று 2024 வரை கிடப்பில் போடப்பட்டது. பல போராட்டங்களுக்கு பின் 9 பேர் கொண்ட கமிட்டி ஏற்படுத்தி நேர்காணல், மதிப்பெண் வழங்கப்பட்டு பதவி உயர்வு உத்தரவை வெளியிடும் வகையில் தற்போதைய நிலை இருந்தும் தாமதம் செய்யப்படுகிறது.
இதன் பின்னணியில், 2017, 2020 ல் பதவி உயர்வு பெற்று, தற்போது இணை பேராசிரியர்களாக உள்ள பலர் அதற்கான சம்பளம் பெற்று வரும் நிலையில், அவர்களில் சிலருக்கு பதவி உயர்வில் சிக்கல் நீடிக்கிறது. அந்த 'சிக்கல்' பேராசிரியர்கள் சிலர் தான் தற்போது பல்கலைகளில் உயர் பதவிகளில் 'கூடுதல் பொறுப்பு' வகிக்கின்றனர். எனவே 2022க்கான பதவி உயர்வை வெளியிட்டால் அவர்கள் பதவி உயர்வு நிலை பாதித்து, கேள்விக்குறியாகும். இதனால் எங்கள் பதவி உயர்வில் அவர்கள் 'அரசியல்' செய்து இழுத்தடிக்கின்றனர். இந்த 'அரசியல்' அமைச்சர், கன்வீனருக்கு புரியவில்லை. இதுதான் போராட்டத்திற்கு காரணம். பதவி உயர்வு கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.
 மருந்து, படுக்கையுடன் வந்த பேராசிரியர்கள் தொடர் போராட்டம் என்பதால் இரவிலும் பதிவாளர் அறைக்குள் தங்க வேண்டியது வரும். இதனால் போராட்டத்தில் பங்கேற்க வரும் பேராசிரியர்கள் தேவைப்படும் மருந்து மாத்திரைகளையும், தங்குவதற்கான உடமைகளையும் எடுத்து வரும்படி 'மூபா' சார்பில் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்று துவங்கிய போராட்டத்தில் பேராசிரியர்கள் தயார் நிலையில் பங்கேற்றனர்.

