UPDATED : நவ 13, 2025 07:08 AM
ADDED : நவ 13, 2025 07:08 AM
சென்னை:
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள, கல்லுாரி கல்வி இயக்கக வளாகத்தில், பல்கலை ஆசிரியர் சங்கம் மற்றும் 'மூட்டா' அமைப்பு இணைந்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதிய திட் டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். தனியார் பல்கலை சட்ட மசோதாவை கைவிட வேண்டும்.
அரசு உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்களுக்கான பணி மேம்பாட்டு ஊதியம், நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடந்தது.
இது குறித்து, அகில இந்திய பல்கலை, கல்லுாரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நாகராஜன் கூறியதாவது:
அரசு உதவி பெறும் கல்லுாரி பேராசிரியர்களுக்கு, பணி மேம்பாட்டு ஊதியம் வழங்க, 2021ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், தமிழகத்தில் ஆறு மண்டலங்களில், பேராசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம் வழங்கவில்லை. தனியார் பல்கலை சட்டம் மிகவும் ஆபத்தானது.
அந்த சட்டத்தை திரும்பப் பெறுவதாக கூறியுள்ளனர். எங்கள் கோரிக்கையை, அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

