UPDATED : செப் 25, 2024 12:00 AM
ADDED : செப் 25, 2024 08:22 AM
சென்னை:
சென்னை பல்கலைக்கு துணைவேந்தரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை பல்கலையில் ஆசிரியர், அலுவலர் சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கடந்த 2014ல், முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 22 பேராசிரியர்களை விசாரிக்க, நீதிமன்ற உத்தரவுப்படி குழு அமைக்க வேண்டும்.
தொடர்புடைய பேராசிரியர்கள் பல்கலையின் முக்கிய பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஏழாண்டுகளுக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.
பதவி உயர்வில் ஏற்கனவே உள்ள நடைமுறையை கடைபிடிக்க வேண்டும். கடந்த 2018லிருந்து ஓய்வுபெற்றோருக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும். காலியாக உள்ள 347 பேராசிரியர் பணியிடங்களை நிரப்பவும், துணை வேந்தரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.