கல்லுாரி பாடத்திட்டத்தில் பாகிஸ்தான் அவசியமில்லை என கூட்டத்தில் எதிர்ப்பு
கல்லுாரி பாடத்திட்டத்தில் பாகிஸ்தான் அவசியமில்லை என கூட்டத்தில் எதிர்ப்பு
UPDATED : ஜூன் 27, 2025 12:00 AM
ADDED : ஜூன் 27, 2025 07:04 PM
புதுடில்லி:
டில்லி பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு முதல் கல்லுாரி பாடத்திட்டத்தில் இஸ்லாம், பாகிஸ்தான் மற்றும் சீனா தொடர்பான பாடங்களை விலக்க வேண்டும் என ஒரு சாராரும், அத்தகைய பாடங்கள் அவசியம் என மற்றொரு பிரிவினரும் கூறியதால், வரும் ஜூலை 1ல் இறுதி முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டில்லி பல்கலைக்கழகத்தின் அகாடமி விவகாரங்களுக்கான நிலைக்குழு கூட்டம் நேற்று முன்தினம், பல்கலைக்கழகத்தில் நடந்தது. அதில் பங்கேற்றவர்கள், நான்கு தாள்களான - இஸ்லாம் மற்றும் சர்வதேச விவகாரங்கள், பாகிஸ்தான் மற்றும் இந்த உலகம், நவீன காலத்தில் சீனாவின் பங்கு, பாகிஸ்தான் அரசு மற்றும் சமூகம் ஆகிய நான்கு தாள்களை சேர்ப்பதா அல்லது நிரந்தரமாக நீக்குவதா என விவாதித்தனர்.
ஜூலை 1ல் முடிவு
அதில், ஐந்தாவது ஒரு தாளாக மத தேசியவாதம் மற்றும் அரசியல் வன்முறை என்ற பாடத்தை இணைப்பதா என்பது குறித்து, ஜூலை 1ல் முடிவு செய்யப்படும் என முடிவானது. இந்த விவகாரங்கள் குறித்து, நிலைக்குழு உறுப்பினர்கள் காரசாரமாக விவாதித்தனர். எனவே, அடுத்த கூட்டத்தில் இதுபற்றி முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பேராசிரியை மோனாமி சின்ஹா பின் கூறும் போது, இப்போதைய காலகட்டத்தில் இஸ்லாம், பாகிஸ்தான், சீனா பற்றி அறிந்து கொள்வது அவசியம். எனவே, அதுகுறித்த பாடங்கள் இடம்பெறுவது அவசியம். அதே நேரத்தில் ஜாதி, ஜாதிய வன்முறை, ஒரே பாலின உறவு போன்ற பாடங்களை நீக்க வேண்டியது அவசியம், என்றார்.
அவசியம் என்ன?
பேராசிரியர் ஹரேந்திர திவாரி கூறும் போது, ஹிந்து மதம் குறித்து பல்கலைக்கழகத்தில் படிக்காத போது, இஸ்லாம், பாகிஸ்தான் மற்றும் சீனா பற்றி படிக்க வேண்டிய அவசியம் என்ன... நீக்கப்பட்ட பாடங்கள் எந்த காலத்திலும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படக் கூடாது, என்றார்.
எனினும், இறுதி முடிவு, ஜூலை 1ம் தேதி தான் எடுக்கப்பட உள்ளது.