UPDATED : மே 30, 2024 12:00 AM
ADDED : மே 30, 2024 10:08 AM

பொள்ளாச்சி:
கோவை மாவட்டத்தில், வரும் ஜூன் 6ல் பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளன்றே, 995 பள்ளிகளை சேர்ந்த, 65 ஆயிரத்து, 556 மாணவ - மாணவியருக்கு, காலை சிற்றுண்டி வழங்க துரித ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில்,செயல்படுத்தியகாலை சிற்றுண்டி திட்டத்தில், முதல்கட்டமாக, மாநகராட்சி பள்ளிகள் மற்றும் மதுக்கரை நகராட்சி மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சிகளில் உள்ள, 136 பள்ளிகளை சேர்ந்த, 17 ஆயிரத்து, 671 மாணவ - மாணவியர் பயனடைந்தனர்.
இத்திட்டத்தை செயல்படுத்திய பின், பள்ளிகளுக்கு குழந்தைகள் வருகை, அவர்களது ஆரோக்கியம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
ஒரு குழந்தைக்கு,293.40 கிராம்கலோரி ஆற்றல், புரதம் 9.85 கிராம், கொழுப்பு 5.91 கிராம், இரும்பு சத்து 20.41 மி.கிராம் மற்றும் சுண்ணாம்பு சத்து 1.64 மி.கிராம் கூடுதலாக கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால், அனைத்து அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கும், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
அதனால், ஊரகப்பகுதிகளில் உள்ள, 612 பள்ளிகளை சேர்ந்த, 29 ஆயிரத்து, 904 மாணவ - மாணவியர், நகர்ப்பகுதியை சேர்ந்த 236 பள்ளிகளில் படிக்கும், 13 ஆயிரத்து, 893 மாணவ - மாணவியர் சேர்க்கப்பட்டனர்.
ஒட்டுமொத்தமாக, 848 பள்ளிகளில், 43 ஆயிரத்து, 797 மாணவ - மாணவியர் கடந்த கல்வியாண்டில் பயனடைந்தனர். வரும் கல்வியாண்டு (2024-25), ஜூன் 6ல் துவங்குகிறது. பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளன்றே காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இத்திட்டம், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. கோவை மாவட்டத்தில், 995 பள்ளிகளை சேர்ந்த, 65 ஆயிரத்து, 556 மாணவ - மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட இருக்கிறது.
கூடுதலாக 646 பேர்
கோவை கலெக்டர் கிராந்திகுமார் கூறுகையில், ஜூன் 6 முதல், கோவை மாவட்ட அளவில், 995 பள்ளிகளை சேர்ந்த, 65 ஆயிரத்து, 556 மாணவ - மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
ஊரகப் பகுதிகளில் உள்ள, 22 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது; இப்பள்ளிகளில் விரைவில் துவக்கி வைக்கப்படும்; கூடுதலாக, 646 மாணவ - மாணவியர் பயனடைவர் என்றனர்.