சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றலில் எளிமை கையேடு வெளியீடு
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றலில் எளிமை கையேடு வெளியீடு
UPDATED : செப் 30, 2024 12:00 AM
ADDED : செப் 30, 2024 10:20 AM
புதுச்சேரி:
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்காக, பள்ளிக்கல்வித்துறை தயாரித்துள்ள கற்றலில் எளிமை கையேட்டை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டு, மாணவர்களுக்கு வழங்கினார்.
புதுச்சேரி மாநிலத்தில் தமிழக பாடத்திட்டம் பின்பற்றி வந்த நிலையில் கடந்த 2014-15 ம் கல்வியாண்டு அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து, கடந்த 2023-24 கல்வியாண்டில், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலும், பிளஸ் 1 வகுப்புகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டன. மீதமிருந்த 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு இந்த 2024-25 கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் முதல் முறையாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவிடும் பொருட்டு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் சிறந்த வல்லுனர்களை கொண்டு அனைத்து பாடங்களுக்கும் முக்கிய வினாக்கள் அடங்கிய கற்றலில் எளிமை கையேடு தயார் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 6 புத்தகங்களாக அச்சிடப்பட்டுள்ளது.
இந்த கையேடு வெளியீட்டு விழா கல்வித்துறை வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, கற்றலில் எளிமை புத்தகத்தை வெளியிட்டு மாணவர்களுக்கு வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், ரமேஷ், கலெக்டர் குலோத்துங்கன், கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, துணை இயக்குநர் சிவராம ரெட்டி, முதன்மை கல்வி அதிகாரி மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.