புதுச்சேரி முதுநிலை படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் வரவேற்பு
புதுச்சேரி முதுநிலை படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் வரவேற்பு
UPDATED : ஜூலை 24, 2026 08:34 PM
ADDED : ஜூலை 24, 2026 08:36 PM
புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலைக்கழக முதுநிலை மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான சிறப்பு நுழைவுத் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் புதுச்சேரி பல்கலைகழக இணையதளத்தில் வரவேற்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 2ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த சேர்க்கையானது நுழைவுத் தேர்வில் பெறும் தகுதி மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டுப் கொள்கைகள் மற்றும் கல்வித் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் 4ம் தேதி நுழைவு தேர்விற்கான ஹால் டிக்கெட் டவுண்லோடு செய்து கொள்ளலாம். ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, போர்ட் பிளேர், திருச்சிராப்பள்ளி, சென்னை, விஜயவாடா, புவனேசுவரம், பெங்களூரு மற்றும் குவகாத்தி ஆகிய மையங்களில் இருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று மையங்களை முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, மாணவர்கள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பெரும்பாலான படிப்புகளுக்கு குறைந்தபட்சம் 55 சதவீதம் அல்லது 50 சதவீதம் மதிப்பெண்கள் அவசியமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி ஆண்டு அல்லது இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் அவர்கள் உரிய காலத்திற்குள் தங்களது மதிப்பெண் பட்டியல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே மதிப்பெண் வரம்பின்றி விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பல்கலைக்கழக துணை பதிவாளர் மகேஷ் தெரிவித்துள்ளார்.
