UPDATED : ஆக 26, 2025 12:00 AM
ADDED : ஆக 26, 2025 10:12 AM
சென்னை:
முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்க விழாவில் பங்கேற்பதற்காக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேற்று தமிழகம் வந்தார்.
கடந்த 2022ம் ஆண்டு முதல்வரின் காலை உணவுத் திட்டம் முதல்வர் ஸ்டாலினால் மதுரையில் தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில், இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, முதல்வரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இன்று 26ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று அவர் பகவந்த் மான் நேற்று சென்னை வந்தார். அவரை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சென்று வரவேற்றார்.
அப்போது, பஞ்சாப் முதல்வர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழகத்திற்கும், பஞ்சாப்பிற்கும் இடையே நீண்டகால நல்லுறவு இருக்கிறது. கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய துறைகளில் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த இடத்தில் உள்ளது.
தமிழக முதல்வரின் அழைப்பை ஏற்று இங்கு வந்ததும், காலை உணவுத் திட்டம் விரிவாக்க விழாவில் கலந்து கொள்வதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தமைக்கு நன்றி, என்றார்.