மரம், செடிகளுக்கு கியூஆர் கோடு தாகூர் கல்லுாரியில் புதுமை
மரம், செடிகளுக்கு கியூஆர் கோடு தாகூர் கல்லுாரியில் புதுமை
UPDATED : மே 14, 2024 12:00 AM
ADDED : மே 14, 2024 11:12 AM

புதுச்சேரி:
புதுச்சேரியில் முதல் முறையாக, தாகூர் கல்லுாரி வளாகத்தில் வளர்க்கப்படும் மரம், செடிகளுக்கு கியூஆர் கோடு அமைக்கப்பட்டுள்ளது.
லாஸ்பேட்டையில் உள்ள தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில் 4,000 மரங்களும், ஆயிரக்கணக்கான செடிகளும் வளர்க்கப்பட்டு வருகிறது. பதினைந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கல்லுாரி வளாகத்தில் 7 ஏக்கர் வனப்பகுதியாக மாற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால், இக்கல்லுாரி வளாகம் நகர காடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் தாகூர் கல்லுாரி வளாகத்தையும் சுற்றுலாத் துறை தங்களது வெப்சைட்டில் பதிவிட்டு உள்ளது.
இந்நிலையில், கல்லுாரியில் பயிலும் மாணவர்கள், வருகின்ற பார்வையாளர்கள் கல்லுாரி வளாகத்தில் உள்ள மரம், செடிகளை பற்றி தெரிந்து கொள்ள ஏதுவாக, கல்லுாரியின் தாவரவியல் துறை சார்பில் 'மின்னணு பெயரிடுதல்' என்ற முறையில் பேசும் பயிர்கள் என்ற தலைப்பில் தனி வெப்சைட் துவக்கப்பட்டுள்ளது.
கல்லுாரி வளாகத்தில் உள்ள 4,000 மரங்கள் 105 வகையாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மரத்திற்கும் க்யூ ஆர் கோட் அமைக்கப்பட்டுள்ளது.
மரம் மற்றும் செடிகளில் உள்ள க்யூஆர் கோடை மொபைல் போனில் ஸ்கேன் செய்தால் அந்த மரம் மற்றும் செடியின் இனம், தாயகம், புகைப்படங்கள் மற்றும் ஆங்கிலத்தில் தகவல்களையும் காண முடியும்.
இங்கு வரும் பறவைகளின் உணவுக்காக சமூகவியல் துறை சார்பில், தானியங்கள் பல மரங்களில் வைக்கப்பட்டுள்ளது.