தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாகை மருத்துவ கல்லுாரியில் வரிசை கட்டி நிற்கும் பிரச்னைகள்

நாகை மருத்துவ கல்லுாரியில் வரிசை கட்டி நிற்கும் பிரச்னைகள்

நாகை மருத்துவ கல்லுாரியில் வரிசை கட்டி நிற்கும் பிரச்னைகள்


UPDATED : மே 21, 2024 12:00 AM

ADDED : மே 21, 2024 09:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2024 12:00 AM ADDED : மே 21, 2024 09:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாகை:
மொத்தம் 366.85 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள நாகை மாவட்ட மருத்துவக் கல்லுாரியில் நிலவும் பிரச்னைகளை தீர்த்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக கொண்டு வருவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகையில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை துவக்க வேண்டும் என்பது மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கை. இதையடுத்து, 2020ம் ஆண்டு, மத்திய அரசின் அனுமதியை பெற்று, மருத்துவக் கல்லுாரிக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.

மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதுமான இடமில்லை என்று கூறி, நாகையில் இருந்து 12 கி.மீ., துாரத்தில் உள்ள ஒரத்துாரில், 60.04 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.

அப்போதே, நிலத்தடி நீர் வளம், சாலை வசதி இல்லாத இடத்தில் மருத்துவக் கல்லுாரி அமைந்தால் பொதுமக்களும், நோயாளிகளும் சிரமத்துக்கு உள்ளாவர் என எதிர்ப்பு எழுந்தது.
மோடி துவக்கி வைத்தார்

பொதுமக்களின் எதிர்ப்பை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல், ஒரத்துாரில் 366.85 கோடி ரூபாயில் மருத்துவக் கல்லுாரி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டனர்.

கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி, காணொளி வாயிலாக, நாகை மருத்துவக் கல்லுாரியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். ஆண்டிற்கு 150 மாணவர்கள் வீதம், 450 பேர் படிக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 24ம் தேதி, நாகை அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லுாரி வளாகத்துக்கு முழுவதுமாக மாற்றம் செய்யப்பட்டது. இருந்தபோதும், பொதுமக்களின் எதிர்ப்பால், அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திலேயே மகப்பேறு, குழந்தைகள் பிரிவும், 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவும் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், அவசர சிகிச்சை, புற நோயாளிகள்பிரிவில் டாக்டர்கள் இருப்பதில்லை.

பணியிலிருக்கும் மருத்துவ மாணவர்கள், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை ஒரத்துாரில் உள்ள மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கே அனுப்பி வைக்கின்றனர். இதனால் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் ஒன்றிணைந்து, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மீட்புக்குழு என்ற அமைப்பை உருவாக்கி போராடி வருகின்றனர்.
மூடி மறைக்கின்றனர்

இதற்கிடையில், மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. இதனால், நோயாளிகள், அவர்களுடன் தங்கி உள்ளவர்கள் கழிப்பறைக்கு கூட செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணாமல், மருத்துவக் கல்லுாரி நிர்வாகம், பிரச்னையை மூடி மறைப்பதில் கவனம் செலுத்துவதாக நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், நாகை - வேளாங்கண்ணி சாலையில் இருந்து ஒரத்துாருக்கு, 3 கி.மீ.,க்கு 10 மீட்டர் அகலத்திற்கு சாலை அமைக்கும் பணி, நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கூறும்போது, 'குக்கிராமமான ஒரத்துாரில் தங்கும் வசதி, உணவு போன்ற எதுவும் கிடைக்கவில்லை. கல்லுாரிக்கு செல்லும் குறுகலான சாலை இரவில் கும்மிருட்டாக காட்சியளிக்கிறது.

நாகை பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆட்டோவில் செல்வதற்கு 400 ரூபாய், திரும்புவதற்கு 400 ரூபாய் செலவாகிறது என்றனர்.

நாகை மாவட்ட மருத்துவக் கல்லுாரியில் நிலவும் பிரச்னைகளை உடனடியாக தீர்த்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நம்பியார் நகர் மீனவ பஞ்சாயத்தார் பாலமுருகன் கூறியதாவது:

கடந்த மாதம் 26ம் தேதி, எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பெண் விஷம் குடித்து விட்டார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லை.

ஒரத்துார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினர். நான்கு நோயாளிகள் சேர்ந்தால் தான், 108 ஆம்புலன்சை இயக்க முடியும் என டிரைவர் கூறினார். கால தாமதத்தால் அந்த பெண் இறந்து விட்டார்.

நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு மாதந்தோறும் மருத்துவமனையில் இலவசமாக வழங்கி வந்த மருந்துகளை கூட ஒரத்துார் சென்று பெற்றுக் கொள்ளுமாறு கூறுகின்றனர். ஆட்டோவில் ஒரத்துார் சென்று வர 800 ரூபாய் செலவாகும் என்பதால், முதியோர்கள் மருந்துகள் வாங்கச் செல்வதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us