விடா முயற்சி வெற்றியை தரும் டாக்டர் அருள்மொழிசெல்வன் அட்வைஸ்
விடா முயற்சி வெற்றியை தரும் டாக்டர் அருள்மொழிசெல்வன் அட்வைஸ்
UPDATED : மே 10, 2024 12:00 AM
ADDED : மே 10, 2024 08:56 AM
சிதம்பரம் :
தோல்வி என்பது நிரந்தரமல்ல, விடா முயற்சி இருந்தால் வெற்றி பெறலாம் என, சிதம்பரம் ஆறுமுகநாவலர் பள்ளி செயலரும், டாக்டருமான அருள்மொழிசெல்வன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவர் கூறியதாவது:
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்கள் மனம் தளர வேண்டாம். தேர்ச்சிகள் முக்கியம் தான். ஆனால் தேர்ச்சியே வாழ்க்கையாகி விடாது. ஒரு டாக்டர் என்ற முறையில் சொல்கிறேன், மதிப்பெண் அடிப்படையில் தேர்வை அணுகும் முறையினை சமீப காலமாக காண்கிறேன். மதிப்பெண் குறித்த கவலை, மாணவர்கள், பெற்றோர் இடையே மன அழுத்தம், மன விரிசலை ஏற்படுத்துகிறது.
பெரும்பாலான பெற்றோர்கள், பிள்ளைகள், டாக்டர், இன்ஜினியர் ஆக விரும்புகின்றனர். டாக்டர் படிப்புக்கு நீட் தேர்வுகள் தடையாக உள்ளதாக சோர்வடைகின்றனர். நீட் தேர்வு தேவைப்படாத, 32 க்கும் மேற்பட்ட பாரா மெடிக்கல் படிப்புகள் உள்ளன. இதில் சான்றிதழ் மற்றும் பட்டப் படிப்புகளும் உள்ளது.
குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அதுபற்றி கவலைபடாமல், வேலை வாய்ப்புகளை வழங்கும் நிறைய படிப்புகள் உள்ளது. தேர்ந்தெடுத்து படிக்கலாம். தேர்வில் தோல்வி அடைந்துவிட்டேன் என்று சோர்வடைய வேண்டாம். உங்களுக்கு வேண்டியது, ஊக்கமும், அதற்கான தேடுதலும் தான் அவசியம். படிப்பு மட்டுமல்ல, எதிலும் தோல்வி நிரந்தரமல்ல, வாழ்க்கையில் உன்னதமான இடத்திற்கு செல்ல தொடர் முயற்சியே போதும்.
இவ்வாறு அவர் கூறினார்.