UPDATED : அக் 27, 2026 02:36 PM
ADDED : அக் 27, 2026 02:37 PM
திருச்செங்கோடு:
தமிழக சுகாதாரம், மருத்துவ கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் வழிகாட்டுதல்படி, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் கிரிவல பாதையில், கடந்த ஜூன் முதல் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியில், செங்குந்தர் கல்வி நிறுவனங்கள், சண்முகா கல்வி நிறுவனங்கள், கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனங்கள், வித்யா விகாஸ் நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் தன்னார்வலர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இதில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டுதல் செய்து நெரிசலின்றி பாதுகாப்பாக கிரிவலம் செல்லும் வகையில், சேவை செய்து வருகின்றனர்.
அதன்படி, நேற்று முன்தினம் ஐப்பசி பவுர்ணமி கிரிவலத்தின் போது, கொட்டும் மழையிலும் மாணவர்களின் சேவை தடையின்றி தொடரும் வகையில், செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் செயலாளரும், தாளாளருமான பாலதண்டபாணி, சண்முகா கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமூர்த்தி ஆகியோர், 'ரெயின் கோட்' வழங்கினர்.
மாணவர்கள் மழையில் நனையாமல் கிரிவலப்பாதையில் சேவை செய்ய, 'ரெயின் கோட்' வழங்கிய கல்லுாரி நிர்வாகத்தினரை, பக்தர்கள் பாராட்டினர்.
