டில்லி குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் அரசுப் பள்ளி மாணவி தேர்வு
டில்லி குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் அரசுப் பள்ளி மாணவி தேர்வு
UPDATED : ஜன 25, 2025 12:00 AM
ADDED : ஜன 25, 2025 11:13 AM

ராமநாதபுரம்:
தேசிய அளவில் நடந்த வீர் கதா போட்டியில் வென்ற ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பிருந்தா டில்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
இந்திய பாதுகாப்புத்துறை, கல்வித்துறை இணைந்து ஆண்டுதோறும் வீர் கதா போட்டியை நடத்துகின்றன. இதில் இந்திய சுதந்திரப் போர், விடுதலைப் போராட்ட வீரர்கள், விடுதலைக்குப் பின் வீரதீர செயல்களுக்கான விருது பெற்றவர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் அறியச்செய்து, நாட்டுப்பற்றை வளர்க்கும் நோக்கத்தில், ஓவியம், கவிதை, கட்டுரை, பல்லுாடக விளக்கக் காட்சி போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டில் நடந்த போட்டியில் அனைத்து மாநிலம், யூனியன் பிரதேசங்களில் இருந்து 2 லட்சத்து 31 ஆயிரம் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் 3-5, 6-8, 9-10, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 25 மாணவர்கள் என தேசிய அளவில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் அ.பிருந்தா 15, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் ராணி லட்சுமி பாய் என் கனவில் வந்தார். நம் நாட்டுக்கு நான் சேவை செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார் என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தார்.
மாணவிக்கு ரூ.10 ஆயிரம் முதல் பரிசும், டில்லி கர்தவ்யா பாதையில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பை சிறப்பு விருந்தினராக நேரில் காணும் வாய்ப்பும் பெற்றுள்ளார். தமிழ்நாடு அளவில் தேர்வு செய்யப்பட்ட இருவரில் பிருந்தா மட்டும் தான் அரசுப் பள்ளி மாணவி. பிருந்தா, அவருக்கு வழிகாட்டிய ஆசிரியர் வளர்மதி ஆகியோரை ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.சின்னராஜு, தலைமையாசிரியர் யுனைசி, ஆசிரியர்கள் பாராட்டினர்.