பள்ளி கட்டடத்தில் இயங்கும் கல்பட்டு நியாய விலை கடை
பள்ளி கட்டடத்தில் இயங்கும் கல்பட்டு நியாய விலை கடை
UPDATED : ஏப் 23, 2024 12:00 AM
ADDED : ஏப் 23, 2024 10:05 AM
சித்தாமூர்:
சித்தாமூர் அருகே கல்பட்டு ஊராட்சியில், நியாய விலைக்கடை செயல்பட்டு வருகிறது. அப்பகுதியை சேர்ந்த 186 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைகின்றனர்.
பல ஆண்டுகளாக, தனிநபருக்கு சொந்தமான கட்டடத்தில் நியாய விலை கடை இயங்கி வந்தது. பின், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள சேதமடைந்த கட்டடத்திற்கு நியாய விலை கடை மாற்றப்பட்டது.
கட்டடத்தின் மேல் தளத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு மோசமான நிலையில் இருந்ததால், மழைக் காலங்களில் மழைநீர் உள்ளே புகுந்து, கடையில் உள்ள அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் நனைந்து வீணாகின.
இதையடுத்து, எதிரே இருந்த மற்றொரு பள்ளி கட்டடத்திற்கு மாற்றப்பட்டு, நியாய விலைக்கடை தற்போது செயல்படுகிறது. இப்படி, மாறி மாறி பள்ளி கட்டடத்தில் இயங்கும் நியாய விலைக்கடைக்கு என, தனி கட்டடம் அமைக்க, அதிகாரிகள் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என, கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய நியாய விலை கடை கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.