ராவ் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய கட்டட உரிமையாளர்கள் ஜாமின் மனு தள்ளுபடி
ராவ் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய கட்டட உரிமையாளர்கள் ஜாமின் மனு தள்ளுபடி
UPDATED : ஆக 05, 2024 12:00 AM
ADDED : ஆக 05, 2024 05:09 PM
புதுடில்லி:
டில்லி ராஜிந்தர் நகரில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் புகுந்த வெள்ளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த கட்டடத்தின் இணை உரிமையாளர்களின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டில்லியில் கடந்த வாரம் கனமழை கொட்டித் தீர்த்தது. சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. கடந்த 27ம் தேதி நள்ளிரவில் ராஜிந்தர் நகரை வெள்ளம் சூழ்ந்ததில், அங்குள்ள ராவ் ஐ.ஏ.எஸ்., தேர்வு பயிற்சி மையத்துக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கி இரண்டு மாணவியர், ஒரு மாணவர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பயிற்சி மைய உரிமையாளர்கள் அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளர் தேஷ் பால் சிங் ஆகியோரை 28ம் தேதி கைது செய்தனர். மேலும், கட்டடத்தின் இணை உரிமையாளர்களான பர்விந்தர் சிங், தஜிந்தர் சிங், ஹர்விந்தர் சிங் மற்றும் சர்ப்ஜித் சிங் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இணை உரிமையாளர்கள் நான்கு பேரும் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கூடுதல் குற்றவியல் நீதிபதி ராகேஷ் குமார் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, சி.பி.ஐ., நீதிமன்றத்தில் நிவாரணம் கோர அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்தார்.
சி.பி.ஐ., நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்படும் என இணை உரிமையாளர்களின் வழக்கறிஞர் அமித் சாதா கூறினார்.