வாழ்க்கை சிறக்க புத்தகம் வாசியுங்கள்! அமைச்சர் சாமிநாதன் அறிவுரை
வாழ்க்கை சிறக்க புத்தகம் வாசியுங்கள்! அமைச்சர் சாமிநாதன் அறிவுரை
UPDATED : செப் 19, 2024 12:00 AM
ADDED : செப் 19, 2024 09:14 AM

சென்னை:
வாழ்க்கை சிறக்க புத்தகம் வாசியுங்கள்; வாசிப்பின் பயனை உணர்ந்து வாசியுங்கள்; நம் வாழ்வு சிறக்கும், என அமைச்சர் சாமிநாதன், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்திய ஒலி ஒளிபரப்பாளர் மன்றம் மற்றும் சென்னை பல்கலை இதழியல் துறை சார்பில், வானொலி பயன்பாடு குறித்து, மன்ற தலைவர் நல்லதம்பி எழுதிய, ஒலியலை ஓவியர்கள் புத்தகம் வெளியீட்டு விழா, சென்னை பல்கலையில் நேற்று நடந்தது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:
வாழ்க்கையில் அடிப்படை தேவைகளுக்கு அடுத்த இடத்தை, புத்தக சாலைகளுக்கு தர வேண்டும். நுால்களே நம்மை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும். வானொலி நிலையங்கள், நமக்கு மகிழ்ச்சியை தந்தன. வானொலி வாயிலாக, திரைப்பட பாடல், செய்திகள் மற்றும் பல்வேறு தகவல்களை கேட்டு வளர்ந்தோம்.
இன்றைய தலைமுறை அந்த மகிழ்ச்சியை பெறவில்லை. காரணம் தொலை தொடர்பு சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி. படிக்க படிக்க அறிவு பெருகும். வாழ்க்கை சிறக்க புத்தகம் வாசியுங்கள். வாசிப்பின் பயனை உணர்ந்து வாசியுங்கள்; நம் வாழ்வு சிறக்கும்.
விழாவில், தமிழ் வளர்ச்சி இயக்குனர் அருள், சென்னை பல்கலை பதிவாளர் ஏழுமலை மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.