செய்தித்தாள் படிங்க... மார்க் அள்ளுங்க! மாணவர்களுக்கு கேரள அரசு தாராளம்
செய்தித்தாள் படிங்க... மார்க் அள்ளுங்க! மாணவர்களுக்கு கேரள அரசு தாராளம்
UPDATED : ஆக 14, 2025 12:00 AM
ADDED : ஆக 14, 2025 03:42 PM
திருவனந்தபுரம்:
செய்தித்தாள் மற்றும் புத்தகங்களை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கும் திட்டத்தை, அடுத்த கல்வி ஆண்டு முதல் செயல்படுத்த கேரள பொதுக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
கேரளாவில், வாசிப்பு பழக்கத்தை மாணவர்கள் இடையே வளர்க்க, பொதுக்கல்வித்துறை தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக செய்தித்தாள் உள்ளிட்ட புத்தகங்களை படித்து வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த கேரள பொதுக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, மாநில பொதுக்கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி நேற்று வெளியிட்ட அறிக்கை:
கேரளாவில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கும் திட்டத்தை அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் துவங்கப்படுகிறது. அதன்படி 1ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் வாசிப்பு பழக்கத்தை வளர்த்து கொள்ள வாரந்தோறும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். அதேபோல் ஐந்து முதல் பிளஸ் ௨ படிக்கும் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும்.
இதற்கென ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். வாசிப்பு பயிற்சிக்கு என தனியாக புதிய கையேடு உருவாக்கப்படும். அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பள்ளி கலை விழாவின் போது, வாசிப்பு பயிற்சிக்கு முக்கியத்துவம் தரப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.