புதிய சமூகத்தை உருவாக்க புத்தக வாசிப்பு மிக அவசியம்: எழுத்தாளர் கரு.முருகன்
புதிய சமூகத்தை உருவாக்க புத்தக வாசிப்பு மிக அவசியம்: எழுத்தாளர் கரு.முருகன்
UPDATED : டிச 31, 2024 12:00 AM
ADDED : டிச 31, 2024 11:27 AM
சென்னை:
நந்தனத்தில் நடந்து வரும் புத்தகக் கண்காட்சியின் வெளி அரங்கில், புத்தகம் பேசுது, புத்தகம் பேசுது எனும் தலைப்பில், எழுத்தாளர் கரு.முருகன் பேசினார்.
அவர் பேசியதாவது:
நாட்டில் பகுத்தறிவுள்ள மாநிலம் தமிழகம். ஆனால் இங்கு, மதுக்கடைகள் மூடினாலும், போதை பழக்கத்திலிருந்து, விடுபட முடியாத வகையில் இளைய தலைமுறை உருவாகியுள்ளது. இந்த, இளைய தலைமுறையை நல்வழிப்படுத்த, பாடப் புத்தகங்களை தவிர்த்து, மற்ற நல்ல புத்தகங்களையும் படிக்க வைக்க வேண்டும்.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால், எழுத்தாளர்கள் அதிகரித்துள்ளனர். ஆனால், வாசகர்கள் குறைந்து உள்ளனர். பலரது வீடுகளில், சிறிய அளவிலான நுாலகங்கள் உள்ளன. ஆனால், அவை அலங்கார பொருட்களாகவும், தன் பொருளாதாரத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் மட்டுமே உள்ளது.
ஒவ்வொரு புத்தகமும், ஒவ்வொரு நற்செய்தியை எடுத்துரைக்கும். ஒரு நல்ல புத்தகம், நாட்டில் புரையோடி கிடக்கும் அவலங்களை போக்கும்; மனங்களை பக்குவப்படுத்தும்; நல்ல மனிதனை உருவாக்கும்; தேசத்தை நல்வழிப்படுத்தும், நேர்மறையான சிந்தனையை உருவாக்கும்.
வன்முறை இல்லாத புதிய சமூகத்தை உருவாக்க, புத்தக வாசிப்பு அவசியம். அவை, மதிப்பெண் சார்ந்த புத்தகங்களாக மட்டுமே சுருங்கி விடக்கூடாது. வன்முறையற்ற இளைய சமூகத்தை உருவாக்க, நிர்வாகத்தாலும், அரசாலும் மட்டும் இயலாது.
ஆகையால் பெற்றோரே, நல்ல கருத்துள்ள இலக்கியங்களை வாங்கி, பிள்ளைகளை வாசிக்க வைக்க பழக்க வேண்டும்.
இவ்வாறு தன் பேச்சை ஆவேசமாக முடித்தார்.