அரசு பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பு கட்டாயம்; உத்தராகண்ட் அரசு அறிவிப்பு
அரசு பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பு கட்டாயம்; உத்தராகண்ட் அரசு அறிவிப்பு
UPDATED : டிச 22, 2025 12:15 PM
ADDED : டிச 22, 2025 12:16 PM
உத்தராகண்ட்:
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பகவத் கீதையின் வாசகங்களை வாசிப்பதை கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எங்கள் அரசு மாநில பள்ளிகளில் கீதையின் ஸ்லோகங்களை வாசிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இந்த முயற்சி மாணவர்கள் இந்திய கலாசாரத்தை அறிய முடியும். அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. மாணவர்களிடையே சுய ஒழுக்கம் மற்றும் தலைமைப் பண்புகளை வளர்ப்பதே இந்த முயற்சியின் நோக்கம்.
இவ்வாறு புஷ்கர் சிங் தாமி கூறினார்.
இந்த புதிய உத்தரவுபடி, பள்ளிகளில் காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது தினமும் ஒரு பகவத்கீதை ஸ்லோகம் வாசிக்கப்பட வேண்டும். அதன் பொருள் மற்றும் அதன் அறிவியல் ரீதியான தொடர்பு குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்க வேண்டும் என உத்தராகண்ட் அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உத்தராகண்ட் கல்வி அமைச்சர் தன் சிங் ராவத் கூறியதாவது:
17 ஆயிரம் அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பகவத்கீதை மற்றும் ராமாயணத்தை சேர்க்குமாறு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இடம் கோரிக்கை விடுத்து உள்ளோம். இது செயல்படுத்தப்படும் வரை, பள்ளிகளில் தினசரி பிரார்த்தனைக் கூட்டங்களில் பகவத் கீதை வாசிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

