கூடுதல் விடைத்தாள் தர மறுப்பு தட்டச்சு மாணவர்கள் பாதிப்பு
கூடுதல் விடைத்தாள் தர மறுப்பு தட்டச்சு மாணவர்கள் பாதிப்பு
UPDATED : செப் 02, 2025 12:00 AM
ADDED : செப் 02, 2025 08:59 AM

சென்னை:
''தட்டச்சு தேர்வில், கூடுதல் விடைத்தாள் வழங்க மறுத்ததால், மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். கெடுபிடி செய்து, தட்டச்சு மாணவர்களுக்கு துன்பத்தை விளைவிப்பது ஏற்புடையதல்ல,'' என, தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
தமிழகம் முழுதும் தமிழ், ஆங்கிலம் தட்டச்சு தேர்வுகள், கடந்த இரண்டு நாட்களாக நடந்தன. சென்னை புரசைவாக்கம் பாலிடெக்னிக் கல்லுாரியில், 'தேர்வு மைய எண் - 11' ல், தட்டச்சு தேர்வு நடந்தது. இங்கு 1,000 மாணவர்களுக்கு மேல், தட்டச்சு தேர்வில் பங்கேற்றனர்.
தட்டச்சு செய்யும் போது, கூடுதல் விடைத்தாள் தேவைப்பட்டதால், தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் மாணவர்கள் விடைத்தாள் கேட்டுள்ளனர். ஆனால், கண்காணிப்பாளர் கூடுதல் விடைத்தாள் அளிக்க மறுத்துள்ளார்.
இதையடுத்து, விடைத்தாளின் பின்புறம் தட்டச்சு செய்ய அனுமதி கேட்டுள்ளனர். அதற்கும், கண்காணிப்பாளர் அனுமதிக்கவில்லை. இதனால், தேர்வை முழுமையாக எழுத முடியாமல், பல மாணவர்கள் அவதியுற்றனர்.
இதுகுறித்து, தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர், கூடுதல் இயக்குநர் மற்றும் வட்டார அலுவலர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.
இதுபோல கெடுபிடி செய்து, தட்டச்சு மாணவர்களுக்கு பெருத்த துன்பத்தை விளைவிப்பது கண்டனத்துக்குரியது. எதிர்காலத்தில் இப்படி நிகழாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

