தனியார் பள்ளி வளாகங்களில் மதம், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை: பள்ளிக்கல்வி துறை உத்தரவு
தனியார் பள்ளி வளாகங்களில் மதம், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை: பள்ளிக்கல்வி துறை உத்தரவு
UPDATED : மார் 06, 2026 11:12 AM
ADDED : மார் 06, 2026 11:21 AM

சென்னை:
தமிழகத்தில் தனியார் பள்ளி வளாகங்களில், மதம், மொழி, அரசியல் மற்றும் ஜாதி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு, பள்ளிக்கல்வி துறை தடை விதித்துள்ளது. இதன் விபரம் தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளும், பள்ளிக்கல்வி துறையின் அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன.
இவற்றை கண்காணிப்பதற்காக, தமிழக தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகள் சட்டம், பள்ளிக்கல்வி துறை சார்பில் இயற்றப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், தனியார் பள்ளி வளாகங்களில், பல்வேறு கல்வி சாரா நிகழ்வுகள் நடத்தப்படுவதாக, பள்ளிக்கல்வி துறைக்கு புகார்கள் சென்றன.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு தனியார் பள்ளி ஒழுங்குமுறை விதிகளில் திருத்தங்கள் செய்து, பள்ளிக்கல்வி துறை சார்பில் அரசாணை பிறப்பித்து, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளி நிலம், கட்டடம் போன்றவற்றை, கல்வி மற்றும் அதற்கு இணையான செயல்பாடுகள், மாணவர் நலத்திட்டங்கள், பள்ளி நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இவை, அந்தந்த கல்வி நிறுவனத்தின் மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும்.
அரசியல், மதம், இனம், ஜாதி, மொழி ஆகியவற்றின் அடிப்படையில், மாணவர்களிடையே பகைமை, வெறுப்பு அல்லது பிளவை ஏற்படுத்தும் செயல்பாடுகள் என, கல்விக்கு தொடர்பில்லாத நிகழ்ச்சிகளுக்கு, பள்ளி வளாகத்தை பயன்படுத்தக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

