புற்றுநோய், நரம்பியல் சிகிச்சை பிரிவுக்கு மத்திய அரசிடம் ரூ.1,051 கோடி கேட்பு; நட்டாவிடம் மா.சு., மனு
புற்றுநோய், நரம்பியல் சிகிச்சை பிரிவுக்கு மத்திய அரசிடம் ரூ.1,051 கோடி கேட்பு; நட்டாவிடம் மா.சு., மனு
UPDATED : மார் 06, 2025 12:00 AM
ADDED : மார் 06, 2025 07:51 PM
சென்னை:
தமிழகத்தில் புற்றுநோய், நரம்பியல் சிகிச்சை பிரிவை மேம்படுத்த, மத்திய அரசிடம், 1,051.39 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று முன்தினம் டில்லி சென்றார். அங்கு மத்திய அமைச்சர் நட்டாவை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தார்.
பின், டில்லியில் அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
தமிழகத்தில், 36 அரசு மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. மயிலாடுதுறை, தென்காசி, காஞ்சிபுரம், பெரம்பலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் ஆகிய, ஆறு மாவட்டங்களில் கல்லுாரிகள் இல்லை. இங்கு, அரசு மருத்துவ கல்லுாரி துவங்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
மேலும், நாமக்கல், திருப்பூர், விருதுநகர் மருத்துவ கல்லுாரிகளில் தலா, 100 எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கு அனுமதி உள்ளது. அவற்றை, 150 ஆக உயர்த்தவும் கோரியுள்ளோம். மாநிலத்தில் மக்கள் தொகை அடிப்படையில், கூடுதலாக, 24 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 26 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள், 500 துணை சுகாதார நிலையங்கள் துவங்க வேண்டும்.
மாநிலம் முழுதும் புற்றுநோய் கட்டமைப்புகளை மேம்படுத்த, 447.94 கோடி ரூபாய்; 22 அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவை மேம்படுத்த, 603.45 கோடி ரூபாய் வேண்டும்.
மதுரையை தொடர்ந்து, கோவையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை துவக்க வேண்டும். தமிழகத்தில், 'நீட்' தேர்வு விலக்கு உள்ளிட்ட 11 கோரிக்கைகள் அடங்கிய மனு, மத்திய அமைச்சரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.