UPDATED : ஜன 22, 2026 10:59 AM
ADDED : ஜன 22, 2026 11:00 AM
திண்டுக்கல்:
“மாணவர்களின் நலன் கருதி காலம் கடத்தாமல் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை விரைவாக நடத்த வேண்டும் '' என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் வலியுறுத்தி உள்ளார்.
அவர் கூறியதாவது:
ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு ஜனவரியில் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. ஜனவரி முடிவடையும் நிலையில் அறிவிப்பு இன்னும் வெளியிடவில்லை.
நிர்வாக பணியிடங்களாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை கருத்தில் கொண்டும், பதவி உயர்வுக்கு காத்திருக்கும் ஆசிரியர்கள் 5 ஆண்டுகளாக பணி ஓய்வு பெறும் சூழலை கருத்தில் கொண்டும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை உடனடியாக அரசு வெளியிட வேண்டும்.
தேர்வு நடத்துவதற்கு முன் 2025 நவ.15, 16ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். குறிப்பாக பணியில் உள்ள ஆசிரியர்கள், தகுதித் தேர்வு எழுதும் அனைவருக்கும் பணி வாய்ப்புக்கும், பணியில் தொடரவும் தகுதித்தேர்வு மதிப்பெண்களை 50 சதவீதமாக குறைத்திடவும், அந்த நடைமுறையை 2025 நவ.15, 16ல் நடந்த தேர்வின் முடிவுகளில் இருந்து அமல்படுத்த வேண்டும்.
ஆசிரியர்களின் பணிகாலத்தின் அடிப்படையில் தேர்வு மதிப்பெண்களில் தளர்வு அளிக்க வேண்டும். துறையில் பணியாற்றும் ஆய்வக உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளிட்டோரில் உரிய கல்வித்தகுதி பெற்றவர்களுக்கும் சிறப்பு தகுதி தேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கிட வேண்டும்.
கேரள மாநில கல்வித்துறையில் விதிவிலக்கு அளித்தது போல் நெட், செட், எம்.பில்., பிஎச்.டி முடித்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும். மாற்றுத்திறன் ஆசிரியர்களுக்கு ஆந்திரா, தெலுங்கானா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ளது போல் தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து அறிவிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

